Ad Banner
 பொது

பத்துமலையில் மின்படிக்கட்டு  குறித்த சர்ச்சை; தேவஸ்தானம் விளக்கம்

08/01/2026 09:09 PM

பத்துமலை, ஜனவரி 08 (பெர்னாமா) -- பத்துமலை முருகன் திருத்தலத்தையும் உட்படுத்தி இருக்கும் கோலாலம்பூர் ஶ்ரீ மஹா மாரியம்மன் ஆலய தேவஸ்தானம், ஆர்.ஓ.எஸ் எனப்படும் சங்கங்களுக்கான பதிவிலாகாவில் பதிவு செய்யப்படவில்லை. 

அது தேசிய சட்டத்துறைத் தலைவரின் நேரடி மேற்பார்வையில் பதிவு பெற்றிருக்கும் ஓர் அறக்கட்டளை ஆகும்.

எனவே, எந்தவொருமுடிவோ அல்லது அறிவிப்போ செய்வதற்கு முன்னதாக,  தேவஸ்தானத்தின் உண்மை நிலைப்பாட்டை முழுமையாக ஆராய்ந்து பின்னர் வெளியிடுமாறு கோலாலம்பூர் ஶ்ரீ மஹா மாரியம்மன் தேவஸ்தானத்தின் சட்டப் பொறுப்பாளர் வழக்கறிஞர் டத்தோ செல்வகுமார் மூக்கையா தெரிவித்தார்.  

பத்துமலை திருத்தலத்தில் மின்படிக்கட்டு  அமைப்பது குறித்து எழுந்து வரும் சர்ச்சை தொடர்பில் அவ்வாறு கூறிய அவர், முன்னதாக தேவஸ்தான தரப்பு மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்தும் விவரித்தார்.

''துவக்கத்தில் ஒரு விண்ணப்பம் போடப்பட்டது. மஹா மாரியம்மன் தேவஸ்தானத்தின் பேரில் அந்த விண்ணப்பம் செய்யப்பட்டது. சங்கங்களுக்கான பதிவிலாகாவின் எண் அதில் குறிக்கப்படவில்லை என்பதைக் கோடிகாட்டி அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆலயத்தின் அறங்காவலர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து அதில் தேவஸ்தானத் தலைவரும்  கையொப்பதுடன் மற்றொரு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் அக்கடிதத்திற்கு எதிர்மறையான பதிலே கிடைத்தது,'' என்று அவர் விளக்கமளித்தார்.

அதற்குப் பின்னர், மாநில அரசாங்கத்திடமிருந்து இரு கடிதங்கள் கிடைத்ததாகவும், 
அதில் முதல் கடிதத்தில் சங்கங்களுக்கான பதிவிலாகாவில், தேவஸ்தானம் முறையாகப் பதிந்து கொள்ளுமாறு கூறப்பட்டிருந்தது.

இரண்டாவது கடிதத்தில் தனிநபர் பேரில் விண்ணப்பம் இருப்பதாகக் கூறி, நிராகரிக்கப்பட்டதாக செல்வ குமார் கூறினார்.

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் நிராகரிப்பு, தங்களுக்கு அதிருப்தியை அளித்ததாக அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, இரு தரப்பு நியாயங்களை முழுமையாக கேட்டறியமால், சமூக ஊடகங்களில் தேவஸ்தானத்திற்கு எதிராக அவதூறு தகவல்களைப் பரப்பி வருபவர்களையும் தாம் எச்சரிப்பதாக செல்வ குமார் தெரிவித்தார்.

''உண்மைத் தகவல் தெரியாமல் சமூகவலைத்தளத்தில் கருத்து தெரிவிப்போர், அதைப் பகிர்வோர், அதை விநியோகிக்கும் முயற்சியில் ஈடுபடுவோர் ஆகிய அனைவர் மீதும் உரிய சட்டநடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார் அவர்.

இன்று காலை பத்துமலை திருத்தல மண்டபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் அத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

இக்கூட்டத்தில் கோலாலம்பூர் ஶ்ரீ மாரியம்மன் ஆலய தேவஸ்தானத் தலைவர் டான் ஶ்ரீ ஆர். நடராஜா, அறங்காவலர் டத்தோ ந. சிவக்குமார் உள்ளிட்ட அனைத்து பிரதான பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)