கினபதாஙான், ஜனவரி 09 (பெர்னாமா) -- பான் போர்னியோ நெடுஞ்சாலைத் திட்டத்தின் பகுதி 1B-ஐ முடிப்பதற்கு பொறுப்பு வழங்கப்பட்ட மேம்பாட்டாளர், அசல் அட்டவணையுடன் ஒப்பிடும்போது தாமதங்களை ஏற்படுத்திய பகுதி 1A-வின் மேம்பாட்டாளர் செய்த தவறுகளை, பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
பகுதி 1B-யின் தற்போதைய உண்மையான மேம்பாட்டு நிலவரம், 12.27 விழுக்காடு என்றும், திட்டமிடப்பட்ட அட்டவணையின்படி அது 16.68 விழுக்காடாக இருந்திருக்க வேண்டும் என்று பொதுப்பணி துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் மஸ்லான் சுட்டிக்காட்டினார்.
பகுதி 1A-வின் முன்னேற்றம் அசல் அட்டவணையைக் காட்டிலும், 10 விழுக்காடு பின்தங்கியுள்ளது.
96.24 விழுக்காடு இலக்கைக் காட்டிலும், அது 86.35 விழுக்காடு மட்டுமே நிறைவடைந்ததாக டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் மஸ்லான் விவரித்தார்.
''அதில் எங்களுக்குத் திருப்தி இல்லை. 15 தொகுப்புகளில் 4 தொகுப்புகள் மட்டுமே இதுவரை முடிந்துள்ளன. அதாவது 5, 15, 21 மற்றும் 27 ஆகிய தொகுப்புகள் நிறைவடைந்துள்ளன. அவை டோங்கோங்கன்-பாப்பார், தாவாவ்-செம்பொர்னா, லாஹாட் டத்து பைபாஸ், கம்போங் லோட் எம் மற்றும் 32-வது மைல் ஆகிய இடங்களை உள்ளடக்கிய தொகுப்புகளாகும்,'' என டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் மஸ்லான் கூறினார்.
இன்று, சபா, கினபதாஙான்-இல், பான் போர்னியோ நெடுஞ்சாலைத் திட்டத்தின், பகுதி 1B-இல் உள்ள 25 மற்றும் 26-ஆவது பணித் தொகுப்புகளின் செயல்பாடுகளை, நேரில் சென்று பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் டாக்டர் அஹ்மட் அதனைத் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)