பிரிக்பீல்ட்ஸ், ஜனவரி 10 (பெர்னாமா) -- காபி-தேநீர் போன்ற பானங்கள் வெறும் சுவைக்காக மட்டுமல்லாமல் மனித உணர்வுகளோடு நெருங்கி நிற்கும் துணையாக வாழ்வில் இரண்டறக் கலந்துள்ளது.
அதன் மீது மக்கள் கொண்டுள்ள தீராத காதலும் அதனை அருந்துவோரின் எண்ணிக்கையும் எத்தனைக் காலங்கள் கடந்தாலும் குறையாது என்பதைக் கடைகளில் அலைமோதும் கூட்டமே பறைசாற்றுகிறது.
மகிழ்ச்சியைச் சேர்த்து சோகத்தைக் தொலைக்கும் தருணங்களில் மனிதன் தம்மை ஆசுவாசப்படுத்திக்கொள்ள காபி-தேநீரைத் தேடும் பொழுதுகளில் அது அளவோடு இருப்பதே உடல் நலத்திற்குச் சுகாதாரம் என்பதை மருத்துவ
ஆலோசனையோடு இச்சிறப்பு தொகுப்பைக் கொண்டு வருகிறது பெர்னாமா செய்திகள்.
தேயிலைச் செடியில் இருந்து வரும் காபி-தேநீர் கொட்டைகளில் இருந்தும் தயாரிக்கப்படும் காபியும் புத்துணர்ச்சி தரும் பானங்களாகும்.
அவற்றில் மனிதனின் நரம்பு மண்டலத்தைத் தூண்டி உற்சாகப்படுத்தும் வேதிப் பொருட்கள் இருப்பதால் அப்பானங்களை அருந்தியதும் நாம் உற்சாகமாக உணர்கிறோம்.
ஒரு நாளைக்கு ஒரு முறை தேநீரோ அல்லது காபியோ குடிப்பது உடல்நலத்துக்குப் பெரிதாகக் தீங்கு விளைவிக்காது.
அதுவே எல்லை மீறினால் அந்த அமிர்தம் நாளடைவில் நஞ்சாக மாறிவிடும் என்கிறார் மலாயாப் பல்கலைக்கழக மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு மூத்த ஆலோசகர் பேராசிரியர் டத்தோ டாக்டர் ரிஷா மாணிக்கம்.
''அதிக அளவில் காபி-டீ அருந்துவது இதயத் துடிப்பை வேகப்படுத்துவதோடு உடல் வியர்த்தல், கை கால் நடுக்கம் மற்றும் தூக்கமின்மை போன்ற பல உடல்நலப் பாதிப்புகளை உண்டாக்கும். ஆதலால், தினசரி காபி-டீ குடிப்பவர்கள் அதன் அளவை ஒரு கப்பாகக் குறைத்து பின்னர் அந்த ஒரு கப்பையும் நண்பர்களுடன் பகிர்ந்து குடிப்பதன் மூலம் இந்தப் பழக்கத்திற்கு அடிமையாவதைச் சுலபமாகத் தவிர்க்கலாம்'', என்றார் பேராசிரியர் டத்தோ டாக்டர் ரிஷா மாணிக்கம்.
சத்தான உணவு, தேவையான உடற்பயிற்சி, போதிய அளவு நீர், குறைந்த அளவு உப்பு மற்றும் இனிப்பு ஆகியவற்றுடன் கூடிய ஆரோக்கியமான வாழ்க்கை முறையே புத்துணர்விற்கான சிறந்த வழி என்பதால் அவ்விரு பானங்களையும் முடிந்த வரையில் தவிர்ப்பதே விவேகமானது என்றும் டாக்டர் ரிஷா ஆலோசனை கூறினார்.
மருத்துவரின் எச்சரிக்கை இவ்வாறு இருப்பினும் 'காபி-தேநீர் இன்றி அமையாது, எங்கள் உலகு' என்கின்றனர் சில தீவிர பிரியர்கள்.
''ஒரு நாளில் குறைந்தது மூன்று முறையாவது காபி குடித்துவிடுவேன்'', என்றார் பவித்திரா பத்துமலை.
''டீ குடிப்பதற்குச் சுவையாக இருக்கும். அதிகளவு குடித்தால் நோய் நொடிகள் ஏற்படுவது தெரிந்தும் கூட அதை குடிக்காமல் இருக்கமுடியவில்லை'', என்றார் சர்வேஷ் ரவிச்சந்திரன்.
''நான் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று கப் காப்பி குடிப்பேன். காபி குடிக்காமல் என்னால் இருக்க முடியாது'', என்றார் பிரேனிஷ் சுப்பிரமணியம்.
இன்னும் சிலரோ, வேலையின் அழுத்தம் மற்றும் உடல் சோர்வை மறக்க இப்பானங்களே தங்களின் உற்றத் துணையாக இருப்பதாகவும் கருதுகின்றனர்.
''டீ குடித்தால்தான் சுறுசுறுப்பாக வீட்டு வேலை செய்ய முடியும்'', என்றார் கலைவாணி சுப்ரமணியம்.
''இரவு நேரங்களில் வாகனமோட்டும்போது விழிப்புடன் இருக்க டீ குடிப்பேன்'', என்றார் செல்வன் தியாகு.
இதனிடையே உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்க சத்தான மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை வழக்கப்படுத்திக் கொள்வது அவசியமாகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)