Ad Banner
 பொது

புலம்பெயர்ந்தோரை அங்கீகரிக்கும் அயலகத் தமிழர் தினம்

11/01/2026 07:58 PM

நந்தம்பாக்கம், 11 ஜனவரி (பெர்னாமா) --  தமிழ்நாடு மட்டுமின்றி மலேசியா, இலங்கை, சிங்கப்பூர், கனடா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா போன்ற பல நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்கள், தங்களின் உழைப்பு, திறமை மற்றும் பண்பாட்டு செழுமையால் தமிழின் பெருமையை உலகெங்கும் நிலைத்திருக்க செய்கின்றனர்.

தாயகத்தில் இருந்து விலகி வாழ்ந்தாலும், மொழி, தமிழர்களின் மரபு, விழாக்கள் மற்றும் பாரம்பரியங்களை முறையே பாதுகாத்து, அதனை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்லும் அயலக தமிழர்களின் பங்களிப்பை போற்றும் விதமாக,

இன்று மற்றும் நாளை இரு தினங்களுக்கு 'அயலகத் தமிழர் தினத்தை' தமிழ்நாட்டு அரசாங்கத்தின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஏற்று நடத்துகின்றது.

கடந்த 2022-ஆம் ஆண்டு தொடங்கி, ஒவ்வொரு ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி அயலகத் தமிழர் தினம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், இவ்வாண்டு தமிழால் இணைவோம்! தரணியில் உயர்வோம் எனும் கருப்பொருளுடன் மிகச் சிறப்பாக நடத்தப்படுகின்றது.

இவ்விழாவில் பல நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் தலைவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிலையில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குறிப்பாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் மலேசியாவில் தங்களின் முதலீட்டை விரிவுப்படுத்திக் கொள்வதற்கு இவ்விழா ஒரு வாய்ப்பாக அமையும் என்று பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் கூறினார்.

''சுகாதார சுற்றுலா இதை கருத்தில் கொள்ள வேண்டும். இதற்கு மலேசியாவில் நிறைய வாய்ப்புகள் உள்ளது. இந்தோனேசியா, சீனா போன்ற பல நாடுகள் முதலீடு செய்கின்றனர். ஆக, மலேசியாவில் தமிழ்நாடு முதலீடு செய்வதற்கு எவ்வித பிரச்சனைகளும் இல்லை. தாரளமாக வரலாம். நிறைய பேர் கேட்கின்றனர். அவர்கள் என்னை சந்திக்கலாம். நான் அவர்களுக்கான உதவிகளை வழங்க கடமைப்பட்டுள்ளேன். அதன் மூலம் பேராக்கிற்கு முதலீடு வாய்ப்புகள் கூடும்'', என்றார் அவர்.

அதோடு, இவ்விழா இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீடு விவசாயம் உள்ளிட்ட துறைகளிலும் சிறந்த அடைவுநிலையை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.

இரு தினங்களுக்கு நடைபெறும் இவ்விழாவை, நாளை காலை 10 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிறைவு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனிடையே, இவ்விழாவில் பல நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)