தோக்கியோ, ஜனவரி 11 (பெர்னாமா) -- ஜப்பானிய பிரதமர் சனே தகைச்சி அந்நாட்டில் முன்கூட்டியே பொதுத் தேர்தலை நடத்துவதற்குச் சாத்தியம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
அதனை தொடர்ந்து, வரும் பிப்ரவரி மாதம் ஜப்பானில் பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என்று ஜப்பானின் கூட்டணிக் கட்சித் தலைவர் ஹிரோபூமி யோஷிமுரா கோடிகாட்டியுள்ளார்.
ஜப்பானின் முதல் பெண் பிரதமரான தகைச்சி அக்டோபரில் பதவியேற்றதிலிருந்து பல தரப்பினரின் ஆதரவைப் பெற்று வருகிறார்.
சீனா மீதான அவரது கடுமையான நிலைப்பாடும் அந்நாட்டின் வலதுசாரி வாக்காளர்களை ஈர்த்துள்ளதாக நம்பப்படுகிறது.
இதனை சாதகமாகப் பயன்படுத்தி முன்கூட்டியே தேர்தலை நடத்துவது குறித்து தகைச்சி அலோசித்து வருவதாக ஹிரோபூமி யோஷிமுரா கூறினார்.
அரசாங்க வட்டாரங்களை மேற்கோள் காட்டி பிப்ரவரி 8 அல்லது 15ஆம் தேதிகளில் திடீர் தேர்தலை நடத்துவது குறித்து தகைச்சி பரிசீலித்து வருவதாக யோமியுரி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இருப்பினும் தேர்தலுக்கான குறிப்பிட்ட நேரம் குறித்து தாமும் தகைச்சியும் விவாதிக்கவில்லை என்று யோஷிமுரா கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)