Ad Banner
 சிறப்புச் செய்தி

மாணவர்களின் உற்சாக வருகையால் களைக் கட்டியது தெலுக் டத்தோ தமிழ்ப்பள்ளி

12/01/2026 04:10 PM

பந்திங், ஜனவரி 12 (பெர்னாமா) -- புதிய பள்ளித் தவணை தொடங்கும் போது பாலர் வகுப்பிலும் முதலாம் ஆண்டிலும்  புதிதாக இணையும் மாணவச் செல்வங்கள் தயக்கத்தோடும் அச்சத்தோடும் விம்மி விம்மி அழுதுக்கொண்டு வந்த நாள்கள் மெல்ல மெல்ல மறைந்து வருகின்றன.

புதிய தொடக்கத்தின் அடையாளமாகப், பெரும்பாலான மாணவர்கள் முகம் மலர்ந்து பள்ளிக்கு வரும் காட்சிகளையும் புதிய நண்பர்களோடு கைக்கோர்த்து நட்பு பாராட்டிய தருணங்களையும் சிலாங்கூர் பந்திங்கில் உள்ள தெலுக் டத்தோ தமிழ்ப்பள்ளியில் காண முடிந்தது. 

அந்த உற்சாகமான முதல் நாள் தொடக்கத்தைப  பதிவு செய்தது பெர்னாமா செய்திகள். 

சுமார் ஒரு மாத கால விடுமுறைக்குப் பின்னர் மீண்டும்  பள்ளிக்கு வரும் மாணவர்களோடு புதிய மாணவர்களையும் வரவேற்பதற்காகப் பள்ளி தரப்பில் உருவ பொம்மைகள், நாதஸ்வர மேள தாளங்கள், பரிசுகள் என்று நுழைவாயிலில் ஆசிரியர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

கோலா லாங்காட் மாவட்டத்தில் உள்ள 13 தமிழ்ப்பள்ளிகளில் அதிகமான அதாவது 550 மாணவர்களைக் கொண்டுள்ள தெலுக் டத்தோ தமிழ்ப்பள்ளியில் இவ்வாண்டு முதலாம் ஆண்டில் 73 மாணவர்களும் பாலர் பள்ளியில் 70 மாணவர்களும் பதிந்து கொண்டுள்ளதாகப் பள்ளியின் தலைமையாசிரியர் கணேஷ் இராமசாமி தெரிவித்தார்.

"உருமாற்றம் மற்றும் புத்தாக்கத்தின் அடிப்படையில் பள்ளி செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி புறப்பாட நடவடிக்கைகள், விளையாட்டுப் போட்டிகள் என்று பலவற்றில் பல்வேறு சாதனைகளைத் தொடர்ந்து பதிவு செய்து வருகிறது," என்று அவர் கூறினார்.

இதைத் தவிர்த்து அடுத்த பத்தாண்டுகளில் மாணவர்களுக்குத் தேவையான தொழில்நுட்ப வசதிகளின் கட்டமைப்பை உட்படுத்திய கல்வி மேம்பாட்டு மையமும் பள்ளியின் முத்தாய்ப்பான ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டார்.

முதலாம் ஆண்டு மாணவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதன் சவால் மற்றும் நுட்பம் குறித்து விளக்குகின்றார் ஆசிரியர் காந்திமதி செல்வராஜ். 

"இப்போதுள்ள பல மாணவர்கள் தமிழைக் கடந்த மற்ற மொழிகளில் சிறந்து விளங்குவதால் தமிழ்மொழியில் அவர்களுக்குப் போதிப்பதில் முதலாம் ஆண்டு ஆசிரியர்கள் சவால்களை எதிர்கொள்கின்றனர்," என்று அவர் விவரித்தார். 

நகர்புற பள்ளிக்கு ஈடாக அனைத்து வசதிகளும் கொண்ட தெலுக் டத்தோ தமிழ்ப்பள்ளி தங்களின் பிள்ளைகளுக்குப் பிரகாசமான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் என்ற நம்பிக்கையையும் வந்திருந்த பெற்றோர் வெளிப்படுத்தினர். 

முதலாம் ஆண்டு மாணவர்கள் வகுப்பறைக்குள் நுழைந்ததும் அவர்களின் பெற்றோரே மாணவர்களின் கைப்பிடித்து அரிசியில் 'அ' எழுதி பிள்ளைகளின் கல்விப் பயணத்தைத் தொடக்கி வைத்தனர்.

மேலும், கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில் வகுப்பறைகளில் மாணவர்களின் உற்சாகக் கூச்சலுக்கு இடையே ஆசிரியர்களின் அன்பான வழிகாட்டல் குரல்களும் எதிரொலித்தன.

அந்த உற்சாகத்தோடு மாணவர்கள் சிலர் தங்கள் கல்வி பயணத்தின் முதல் நாள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

''வழக்கம்போல முதல் நாளே பாடங்கள் நடத்தப்படும் என்று எதிர்பார்த்து பள்ளிக்கு வந்தோம் ஆனால் முதல் ஒரு வாரம் முழுவதும் பயிற்சிகள் மட்டுமே நடைபெறும் என ஆசிரியர்கள் அறிவித்தது எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் எங்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பேசியது, நாங்கள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க ஒரு சிறந்த தூண்டுகோலாக அமைகிறது'', என்றார் ஹெனிஷா மாணிக்கம் மற்றும் மீரா ஜோஃபனாண்டஸ் கூறினர்.

அதிலும் சில மாணவர்கள் நீண்ட நாள் விடுமுறைக்குப் பின்னர் நண்பர்களைச் சந்தித்த மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டனர்.

''விடுமுறை நாட்களில் எங்கள் நண்பர்களைப் பார்க்க முடியாமல் மிகவும் ஏங்கினோம், தற்போது அவர்கள் அனைவரையும் மீண்டும் பள்ளியில் சந்தித்தது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது'', ஹர்ஷன் வினோத், சர்வேஸ்வரி சிவநேசன் மற்றும் சஸ்மித்ரா ரமேஷ்வரன் கூறினார்கள்.

தெலுக் டத்தோ தமிழ்ப்பள்ளியில் பயிலும் மாணவர்களிடையே காணப்படும் அளவில்லாத உற்சாகமும் துள்ளலுமமே இப்புதிய கல்வி ஆண்டு ஒரு மிகச்சிறந்த தொடக்கமாக அமைந்திருப்பதை உறுதி செய்கின்றன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)