தாய்லாந்து, ஜனவரி 12 (பெர்னாமா) -- தாய்லாந்தின் தெற்கு எல்லைப் பகுதியான நாராதிவாட் மாகாணத்தில் நேற்று அதிகாலை நிகழ்ந்த குண்டுவெடிப்பு மற்றும் தீ வைப்பு சம்பவங்களை தொடர்ந்து அந்நாட்டு அரசாங்கம் உடனடி ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அடுத்த அறிவிப்பு வரும் வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதோடு இரவு மணி 9 முதல் அதிகாலை மணி 5 வரை மக்கள் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக நாராதிவாட் பணிக்குழு மேஜர் ஜெனரல் யோதாவுத் புயெங்பாக் தெரிவித்தார்.
அச்சம்பவத்தைத் தொடர்ந்து தாய்லாந்து–மலேசிய எல்லைப் பகுதியில் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாக மேஜர் ஜெனரல் யோதாவுத் கூறினார்.
நேற்று அதிகாலையில் நாராதிவாட், யால மற்றும் பட்டாணி மாகாணங்களில் 11 பெட்ரோல் நிலையங்களை குறிவைத்து குண்டுவெடிப்பு மற்றும் தீவைப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டன
இவை முகமூடி அணிந்த ஆயுதக் கும்பலால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து தமக்கு விளக்கம் அளிக்கப்பட்டதாகவும் அதில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் உறுதிப்படுத்தினார்.
பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)