சிலாங்கூர், ஜனவரி 13 (பெர்னாமா) -- மலேசியாவின் இணையப் பாதுகாப்புச் சட்டங்களுக்கு X தளத்தின் செயற்கை நுண்ணறிவு செயலியான க்ரோக் இணங்கத் தவறியதைத் தொடர்ந்து அத்தளத்திற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.
X தரப்பிடமிருந்து பெறப்பட்ட விளக்கங்கள் போதுமானதாக இல்லை என்றும் அது வெறும் கடமைக்காக அளிக்கப்பட்ட மேலோட்டமான பதிலாகத் தெரிவதாலும் இந்நடவடிக்கை பரிசீலிக்கப்பட்டு வருவதாகத் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
''எக்ஸ்-இல் உள்ள க்ரோக் செயலி, குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெண்களின் ஆபாசமான படங்களை உருவாக்கக்கூடிய ஏ.ஐ பிரச்சனை குறித்து கருத்துகளைப் பெற எம்.சி.எம்.சி கடந்த வாரம் எக்ஸ் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டது. இது நம் நாட்டில் சட்ட மீறலாகும், தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் மற்றும் இணையப் பாதுகாப்புச் சட்டத்தையும் மீறுவதாகும்.'' என்றார் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில்
எனவே, இவ்விவகாரத்தில் அச்செயலிக்குத் தற்காலிகத் தடை விதிக்க தாம் உத்தரவிட்டுள்ளதோடு பேச்சு வார்த்தை நடத்த அத்தரப்பு அழைக்கப்பட்டுள்ளதாகவும் டத்தோ ஃபஹ்மி கூறினார்.
மேலும், AI உள்ளடக்க உருவாக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாததால் இத்தடை க்ரோக் செயலியை மட்டுமே உட்படுத்தி இருக்கும் என்றும் முழு X தளத்தையும் பாதிக்காது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
இன்று, சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் தேசிய தகவல் பரப்பு மையம் NADI-இன் ஆலோசனைக் குழுத் தலைவர்களுக்கான நியமனச் சான்றிதழ்களை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் டத்தோ ஃபஹ்மி அவ்வாறு கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)