Ad Banner
 பொது

150 அந்நிய நாட்டவர்களை மலேசிய குடிநுழைவுத் துறை கைது செய்தது

14/01/2026 02:43 PM

கோலாலம்பூர், ஜனவரி 14 (பெர்னாமா) -- இன்று அதிகாலை கோலாலம்பூரை சுற்றியுள்ள பகுதிகளில் கோலாலம்பூர் மலேசிய குடிநுழைவுத்துறை ஜி.ஐ.எம் இரண்டு வெவ்வேறு சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இச்சோதனை நடவடிக்கைகளில் கைது செய்யப்படுவதைத் தவிர்க்க தண்ணீர் தொட்டியில் ஒழிந்து கொள்வது கட்டிடத்தின் மேல் மாடியில் இருந்து பாராங் கத்தியை வீசி எரிவது கூரை மீது ஏறுவது ஆகிய உத்திகளை அந்நிய நாட்டினர் பயன்படுத்தினர்.

எனினும், இந்த உத்திகள் பலனளிக்காமல் செலயாங்-கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிலும் ஜாலான் கிள்ளான் லாமா-வில் உள்ள அந்நிய நாட்டவரின் சட்டவிரோத குடியிருப்பிலும் மேற்கொள்ளப்பட்ட ஓப்ஸ் குதிப்-பில் 150 அந்நிய நாட்டவர் கைது செய்யப்பட்டனர்.

இரண்டு வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட உளவு நடவடிக்கை மற்றும் பொது மக்கள் வழங்கிய புகார்களின் அடிப்படையில் செலயாங்-கில் நள்ளிரவு மணி 12.30 தொடங்கி அதிகாலை மணி 2 வரை முதலாவது சோதனை நடவடிக்கை நடத்தப்பட்டதாக ஜி.ஐ.எம்-மின் நடவடிக்கை பிரிவு துணை தலைமை இயக்குநர் டத்தோ லோக்மான் எஃபெண்டி ராம்லி தெரிவித்தார்.

அந்த நடவடிக்கையில் 326 பேர் பரிசோதிக்கப்பட்ட வேளையில் குற்றங்கள் புரிந்ததாக சந்தேகத்தின் பேரில் 1959/63ஆம் ஆண்டு குடிநுழைவுத்துறை சட்டத்தின் கீழ் 79 அந்நிய நாட்டவர் கைது செய்யப்பட்டனர்.

அதைத் தவிர்த்து ஒரு வாரமாக மேற்கொள்ளப்பட்ட உளவு நடவடிக்கையைத் தொடர்ந்து அதிகாலை மணி 2.30 தொடங்கி 3.30 வரை ஜாலான் கிள்ளான் லாமா-வில் உள்ள அந்நிய நாட்டவர்களுக்கான சட்டவிரோதை குடியிருப்பில் நடத்தப்பட்ட இரண்டாவது சோதனை நடவடிக்கையில் 71 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் இந்தோனேசியா, நேபாளம், இந்தியா, வங்காளதேசம், பாகிஸ்தான், மியன்மார் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 17 லிருந்து 55 வயதிற்குட்பட்டவர்கள் ஆவர்.

அவ்விரு சோதனை நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் அதிகாரப்பூர்வ கடப்பிதழ் மற்றும் பெர்மிட் இல்லாத காரணத்தினால் 1959/63ஆம் ஆண்டு குடிநுழைவுத்துறை சட்டம் செக்‌ஷன் 6(1)(c)-இன் கீழும் அனுமதிக்கப்பட்ட கால அவகாசத்திற்குப் பின்னர் நாட்டில் வசித்த காரணத்தினால் செக்‌ஷன் 15(1)(c) கீழும் குற்றம் புரிந்ததாக நம்பப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)