கூலாய், 14 ஜனவரி (பெர்னாமா) -- போலி பதிவு எண்ணைக் கொண்டு ரோன்95 பெட்ரோலை நிரப்பிய முதியவருக்கு அபராதம்
இம்மாத தொடக்கத்தில், தமது வாகனத்திற்குச் சொந்தமில்லாத பதிவு எண்ணைக் கொண்டிருப்பதுடன், ரோன்95 பெட்ரோலை நிரப்பிய குற்றத்திற்காக, சிங்கப்பூரின் நிரந்தர குடியுரிமையைக் கொண்டிருக்கும் முதியவர் ஒருவருக்கு, 9,000 ரிங்கிட் அபராதம் விதித்து, கூலாய் மாஜிஸ்திரேட் நிதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
தம்மீதான குற்றத்தை 64 வயதான லோங் சா கோவ் ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து, மாஜிஸ்திரேட் ஆர்.சாலினி அத்தீர்ப்பை வழங்கினார்.
அபராதத்தைச் செலுத்த தவறினால் ஒன்பது மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
இம்மாதம் 2-ஆம் தேதி, இரவு 10.30 மணியளவில், SLJ8967M எனும் பதிவு எண்ணைக் கொண்டிருக்கும் Volkswagen Jetta ரக வாகனத்தின் ஓட்டுநரான லோங், கூலாய் மாவட்டத்தின் ஜாலான் ஜோகூர் பாரு - அயேர் ஹிதாம் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் அக்குற்றத்தைப் புரிந்துள்ளார்.
அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது 20 ஆயிரம் ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகைச் செய்யும், 1987-ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டம், செக்ஷன் 108(3)(e)-இன் கீழ் அவர் மீது குற்றம் பதிவாகியது.
இது, லோங் மேற்கொண்ட முதல் குற்றமாகும்.
அவர் வருமான இல்லாத ஓய்வு பெற்றவர் என்பதாலும், இல்லத்தரசியாக இருக்கும் மனைவி மற்றும் பள்ளி பயிலும் பிள்ளைகளைப் பராமரிக்க வேண்டும் என்பதாலும், அவருக்கு இலகுவான தண்டனையை வழங்குமாறு, தேசிய சட்ட உதவி அறக்கட்டளையின் வழக்கறிஞர் ஷார்மைனீ ஃபாய்ருஸ் முஹமட் சுல்கிப்லி மேல்முறையீடு செய்தார்.
பின்னர், தமக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை, லோங் செலுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)