Ad Banner
 பொது

கினபாதாஙான், லாமாக் இடைத்தேர்தல்கள்; வாக்குச்சாவடிகள் காலை மணி 7.30 முதல் திறக்கப்பட்டன

24/01/2026 01:15 PM

கினபாதாஙான், ஜனவரி 24 (பெர்னாமா) -- கினபாதாஙான் நாடாளுமன்றம் மற்றும் லாமாக் சட்டமன்ற இடைத்தேர்தல்களுக்கான 117 வாக்குச் சாவடிகளை உட்படுத்திய மொத்தம் 36 வாக்களிப்பு மையங்கள் இன்று காலை மணி 7.30-க்கு ஏககாலத்தில் திறக்கப்பட்டன.

அவ்வனைத்து வாக்களிப்பு மையங்களும் மாலை மணி 5.30 வரை திறக்கப்பட்டிருந்தன.

நிர்ணயிக்கப்பட்ட வாக்களிப்பு நேரத்தின்படி, இரண்டு வாக்களிப்பு மையங்கள் நண்பகல் மணி 12-க்கு மூடப்பட்டன.

அதேவேளையில், எஞ்சிய 34 வாக்களிப்பு மையங்கள் பிற்பகல் மணி ஒன்று முதல் மாலை மணி 5.30 வரை கட்டம் கட்டமாக மூடப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இன்று நடைபெற்ற வாக்களிப்பில், கினபாதாஙான் நாடாளுமன்றம் மற்றும் லாமாக் சட்டமன்றத்திற்கான புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் செயல்முறையில் 48,282 வாக்காளர்கள் தங்களின் வாக்களிக்கும் கடமையை நிறைவேற்றினர்.

வாக்களிப்பை நிறைவேற்றியவுடன், ஶ்ரீ லாமாக் மண்டபத்தில் வாக்குகள் அதிகாரப்பூர்மாக எண்ணப்படுவதோடு, இன்று இரவு மணி பத்து அளவில் அதிகாரப்பூர்வ முடிவுகள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்களிப்பு செயல்முறையை, தேர்தல் ஆணையத்தில் பணியாளர்கள் நிர்வகித்த வேளையில், 926 போலீஸ் அதிகாரிகளும் உறுப்பினர்களும் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தனர்.

இந்த இடைத்தேர்தலில் கினபாதாஙான் நாடாளுமன்றத்தில் மும்முனைப் போட்டி நிலவும் வேளையில், தேசிய முன்னணியிலிருந்து முஹமட் குர்னியாவான் நாயிம் மொக்தாரும், வாரிசானிலிருந்து டத்தோ சாட்டி அப்துல் ரஹமானும், சுயேட்சை வேட்பாளராக கோல்டாம் ஹமிட்டும் போட்டியிடுகின்றனர்.

லாமாக் சட்டமன்றத்தில், தேசிய முன்னணியிலிருந்து முஹமட் இஸ்மாயில் ஆயுப்பும், வாரிசானிலிருந்து மஸ்லிவாத்தி அப்துல் மாலிக்கும் நேரடி போட்டியை எதிர்கொண்டுள்ளனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)