Ad Banner
 பொது

நேர்த்தியான முறையில் பக்திப் பரவசத்தோடு காவடி ஏந்தும் பக்தர்கள்

26/01/2026 05:10 PM

சிலாங்கூர், 26 ஜனவரி (பெர்னாமா) -- இடும்பன் சிவகிரி மற்றும் சக்திகிரி மலைகளைக் காவடியாகச் சுமந்து வந்ததை நினைவுப்படுத்தி, ஆணவம் அகற்றி பக்தி உணர்வை வெளிப்படுத்துவதோடு வேண்டிய காரியங்கள் நிறைவேற பக்தர்கள், காவடி ஏந்தி முருகனை வழிபடுகின்றனர்.

மயில், புஷ்பம், வேல் மற்றும் முருகனின் திரு உருவம் போன்ற பல்வேறு காவடிகளுடன், கந்தனை நினைத்து, அதனைச் சுமந்து சென்று பக்தர்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றுகின்றனர்.

இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடவிருக்கும், தைப்பூசத்தை முன்னிட்டு, சிலாங்கூர் பத்துமலை திருத்தலத்திற்கு, இப்போதே பக்தர்கள் ஒன்று கூட தொடங்கிவிட்டனர். 

அவ்வகையில் இந்த ஆண்டு, 48 நாட்கள் விரதம் உட்ப எத்தகைய சமய நெறிகளை பின்பற்றி தகுந்த வரைமுறையோடு பக்கதர்கள் எவ்வாறு காவடி எடுக்க வெண்டும் என்ற தங்களின் கருத்தை பொதுமக்கள் சிலர் பகிர்ந்துக் கொண்டனர்.

''சமயத்திற்கு அப்பார்ப்பட்டு காவடிகள் எடுக்கப்படுகின்றது என்ற குறை நமது மக்களிடம் உள்ளது. அதை தவிப்பதற்கு இவ்வருடம் அனைத்து பக்தர்களும் சமயச் சார்புடைய காவடிகளை எடுக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து,'' என சேதுபதி குமரசாமி கூறினார்.

''பத்துமலைக்கு வரும் பக்தர்கள் அனைவரும் தங்களின் நேர்த்தி கடன்களை செலுத்த தொடங்கி விட்டனர். முறையாக விரதம் எடுத்து பக்தியோடு உங்களின் வேண்டுதல்களை முருகனிடம் சமர்ப்பியுங்கள் அவர் நிச்சயம்  உங்களுக்கு தேவையானதை கொடுப்பார்,'' என சத்தியவதி பச்சியப்பன் தெரிவித்தார்.

''நமது மனசு முதலில் சுத்தமாக இருக்க வேண்டும், முடிந்த அளவு சரியான முறையில் 48 நாட்கள் விரதம் எடுத்தாம் கண்டிப்பாக நல்லதே வந்து சேரும்,'' என பவித்ரா இராஜேந்திரன் கூறினார்.

மேலும், அத்தகைய எழில் நிறைந்த காவடிகளை பக்திப் பரவசத்தோடு ஏந்தினால் குன்றுதோறும் வீற்றிருக்கும் குமரனது கடைக்கண் பார்வையின் தரிசனம் நிச்சயம் கிட்டும் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். 

''நேர்த்தி என்பது நம் மனது. நனது நேர்த்தியை முருகன் பார்த்துக் கொள்வார். உண்மையான அன்போடு வரம் வேண்டினால் நிச்சயம் பலன் கிடைக்கும்,'' அ. பிரபாகரன் கூறினார்.

''தொடர்ந்து 18 வருடங்களாக நான் பத்துமலைக்கு வந்து கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் முறையாக தங்களின் நேர்த்திக் கடன்களை செலுத்துவதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. அதே போல் இவ்வருடமும் சிறந்த நெறிகளைப் பின்பற்றி காவடிகள் எடுக்க வேண்டும் என எதிர்ப்பார்க்கிறேன்,'' என சாமிநாதன் கிச்சான் தெரிவித்தார்.

தைப்பூசம் என்பது பல நாடுகளில் வேறுபட்டிருக்கும் மக்களுக்கு வெவ்வேறான அர்த்தங்களையும், அனுபவங்களையும், தந்தாலும் பக்தி என்ற வேரின் கீழ் பத்துமலை திருத்தலம் பக்தர்களை ஒன்றுபடுத்துகின்றது, என இந்தியாவை சேர்ந்த தினேஷ் பாபு கூறினார்.

''இந்தியாவில் எந்த அளவுக்கு காவடிகள் நேர்த்தியோடும் பக்தியோடும் எடுக்கிறார்களோ அதே போல மலேசியாவிலும் மக்கள் அதே ஆர்வத்தோடும் சமய நெறியோடும் காவடிகள் எடுக்கிறார்கள். தைப்பூசத்தை முன்னிட்டு பத்துமலைக்கு வர வேண்டும் என்ற எனது வேண்டுதல் இவ்வருடம் நிறைவேறியுள்ளது. மீண்டும் ஒரு முறை வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் முருனை பார்த்துச் செல்வேன்,'' என தினேஷ் பாபு பத்மநாதன் பகிர்ந்துக் கொண்டார்.

கால மாற்றத்திற்கு ஏற்ப காவடிகள் வடிவமைப்பதில் மாற்றம் ஏற்பட்டாலும், அதன் கலாச்சாரம் மாறாமல் இருப்பதை எதிர்கால தலைமுறையினர் உறுதி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர்.


-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)