பத்துமலை, 29 ஜனவரி (பெர்னாமா) -- தைப்பூசத்திற்கு இன்னும் 3 நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில், நாளை மறுநாள் வெள்ளி இரதம் பத்துமலை திருத்தலத்தை நோக்கி பயணிக்கவிருக்கின்றது.
இரத ஊர்வலத்தில் தங்களின் யாத்திரையைத் தொடங்கி, தைப்பூச காலம் முழுவதும் பத்துமலைத் திருத்தலத்திற்கு வருகை புரியும் பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பல்வேறு முதலுதவி அம்சங்களை, ஆண்டுதோறும் தேவஸ்தானம் ஏற்பாடு செய்து வருகிறது.
அதில், இம்முறை 1200-க்கும் மேற்பட்ட மருத்துவ உறுப்பினர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டிருப்பதோடு யூ.எம்.எம்.சி எனப்படும் மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையமும் இணைந்து சேவையாற்றவிருப்பதாக, ஶ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் ஒருங்கிணைப்பாளரும், தைப்பூசத்தின் சுகாதார மற்றும் பாதுகாப்பின் பொறுப்பாளருமான, டத்தோ டாக்டர் எ.டி. குமரராஜா கூறினார்.
இவ்வாண்டு தைப்பூசத்தில் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் வருகைப் புரிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், மக்களின் பாதுகாப்பை உறுதிச் செய்வதில் பல்வேறு தரப்பினர் கவனம் செலுத்தி வருகின்றனர்.
அவர்களில், மக்களின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் வகையில் சுகாதார அமைச்சின் ஒப்புதலின் வழி, யூ.எம்.எம்.சி-யும் இணைக்கப்பட்டிருப்பதாக, டத்தோ டாக்டர் எ.டி. குமரராஜா கூறினார்.
"ஒவ்வொரு ஆண்டும் வழங்கும் ஆதரவைப் போல இவ்வாண்டு வழங்குவதாக அவர்கள் உறுதிச் செய்திருந்தாலும், முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் மலாயாப் பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் உதவியை நாடி அவர்களும் மருத்துவ முகாமில் முதன்மையாக இணைக்கப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் கீழ் உள்ள எட்டு அரசாங்க மருத்துவமனைகளும் இந்த மருத்துவ முகாமில் சேர்க்கப்பட்டுள்ளனர். சிலாங்கூர், செலாயாங் மருத்துவமனை முதன்மையாகவும், சுற்றுவட்டாரத்தில் உள்ள எட்டு மருத்துவமனைகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளனர்", என்று அவர் கூறினார்.
பொதுவாக, தைப்பூசத்தின் போது ஏற்படும் கூட்ட நெரிசல் காரணமாக மக்களின் கைத்தொலைப்பேசி சேவையில் துண்டிப்பு ஏற்பட்டாலும், அவர்களின் தேவை அறிந்து மருத்துவ உதவிகள் வழங்குவதற்கான முயற்சிகளையும் ஆண்டுதோறும் தங்கள் தரப்பு மேற்கொண்டு வருவதாக, அவர் கூறினார்.
"சுமார் 80 மணி நேரத்திற்கு எவ்வித துண்டிப்பும் இல்லாமல், அதன் தொடர்பை சுகாதார அமைச்சு, மலாயாப் பல்கலைக்கழக மருத்துவ மையம், தீயணைப்பு மற்றும் மீட்பு துறை, போலீஸ் துறை ஆகிய அனைத்திற்கும் உருவாக்கும். கடந்த 10 ஆண்டுகளாக மேல் குகையிலும், ஆற்றங்கரையிலும் நடக்கக்கூடிய பிரச்சனைகளை தொலைப்பேசி தொடர்பு இல்லை என்றாலும் முதலுதவிகள் வழங்க முடியும்", என்றார் அவர்.
அதேவேளையில், மக்களுக்கான மருத்துவ உதவிகளை வழங்க, 15-க்கும் அதிகமான ஆம்புலன்சுகளும், ஆலயத்தைச் சுற்றி Hotspot எனப்படும் அதிக ஆபத்து கொண்ட சுமார் 24 இடங்களில் மருத்துவ உதவிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக, தைப்பூசத்திற்கான மருத்துவ முகாமில் கடந்த 15 ஆண்டுகளாக தன்னார்வலராக சேவையாற்றி வரும் விக்னேஸ்வரன் கோபால் தெரிவித்தார்.
"கே.டி.எம் வளாகத்தில் தொடங்கி மேல் குகை வரை, பிறகு முதன்மை வாசல் உள்ளிட்ட 24 அதிக ஆபத்து கொண்ட பகுதிகளில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்படும். ஏனென்றால், ஒவ்வொரு ஆண்டும் இந்த இடங்களில் தான் அதிகமான சுகாதாரம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும்", என்று அவர் தெரிவித்தார்.
அதோடு, முதலுதவிச் சேவையை வழங்க சுகாதார அமைச்சு, யூ.எம்.எம்.சி, தீயணைப்பு மற்றும் மீட்புப் படை, மலேசிய பொது பாதுகாப்புத் துறை, JPAM, செம்பிறைச் சங்கம், செஞ்சிலுவைச் சங்கம் என ஏழு நிறுவனங்கள் பயணியாற்றவிருப்பதாக, அவர் கூறினார்.
கோலாலம்பூர் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து வெள்ளி ரதம் புறப்பட்டு, மீண்டும் தாய் கோயிலை வந்தடையும் வரையில் மருத்துவ முகாம்கள் செயல்பாட்டில் இருக்கும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)