Ad Banner
 பொது

இன்றும் தொடர்கிறது கந்தனின் தைப்பூசக் கொண்டாட்டம் 

02/02/2026 07:14 PM

பத்துமலை, 02 பிப்ரவரி (பெர்னாமா) -- இன்றும் தொடர்கிறது முருகக் கடவுளுக்கான தைப்பூசக் கொண்டாட்டம். 

சிலாங்கூர், பத்துமலைத் திருத்தலத்தில், லட்சக் கணக்கான பக்தர்களும் சுற்றுப்பயணிகளும் பங்கேற்ற இந்த ஆன்மீகத் திருவிழாவில், பக்தி, நிர்வாக ஏற்பாடுகள், பாதுகாப்பு, தூய்மை, போக்குவரத்து மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல அம்சங்கள் இவ்வாண்டு வெகுவாக கவனத்தை ஈர்த்த வேளையில் இன்றும் அது தொடர்வது பெர்னாமா செய்திகள் மேற்கொண்ட கண்ணோட்டத்தில் தெரிய வந்தது.

மலேசியாவில், இந்துக்களின் முதன்மை ஆன்மீக விழாவான தைப்பூசம் இவ்வாண்டு அத்திருத்தலத்தில் கோலாகலமாகவும் சீராகவும் நடைபெற்றது. 

காவடி, பால் குடம், விரதம் என தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் வண்ணம் லட்சக் கணக்கான பக்தர்கள் கடந்த இரு வாரங்களுக்கு முன்பிருந்தே பத்துமலையில் கூடிய நிலையில், சிலர் இன்றும் தங்களின் நேர்த்திக் கடன்களைச் செலுத்தி வருகின்றனர்.  

இந்நிலையில், இக்கொண்டாட்டம் முழுவதும் பாதுகாப்பு மற்றும் சுமூகமான சூழலை உறுதிப்படுத்தும் பொருட்டு போலீஸ் படையினரும் தன்னார்வலர்களும் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றி வருவதையும் அங்கே காண முடிந்தது. 

போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த சிறப்பு நடைமுறைகள் அமல்படுத்தப்பட்ட வேளையில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பும் குறிப்பிடத்தக்கதாக இருந்ததும் இக்கண்ணோட்டத்தில் தெரியவந்தது. 

இதனிடையே, இவ்வாண்டு தைப்பூசத்தில், உள்ளூர் பக்தர்கள் மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் வந்த சுற்றுப் பயணிகள் பெருமளவில் பங்கேற்றனர். 

தைப்பூசத்தின் ஆன்மீகமும் தமிழர் பண்பாட்டின் தனித்துவமும் தங்களைப் பெருமளவில் கவர்ந்ததாக சிலர் கூறினர்.

மற்றொரு நிலவரத்தில், லட்சக் கணக்கான மக்கள் திரண்ட இத்திருவிழாவில் தன்னார்வ மருத்துவக் குழுக்களும் முக்கியப் பங்காற்றுகின்றன.

பக்தியும் ஒற்றுமையும் ஒருங்கிணைந்த இவ்வாண்டின் பத்துமலைத் திருத்தலத் தைப்பூசம் பாதுகாப்பும் ஒழுங்கும் நிறைந்த ஆன்மீகத் திருவிழாவாக நடைபெற்றது.

இதனிடையே, பத்துமலை திருத்தலத்தின் நுழைவாயிலின் எதிர்புறம் ஒவ்வோர் ஆண்டும் இரத்த தான முகாம் மேற்கொள்ளப்படும்.

இந்த முகாமில் பலர் இரத்த தானம் செய்து, சமய நெறியோடு தங்களின் மனிதநேயத்தையும் வெளிப்படுத்துவர்.

அந்த வகையில், ஜனவரி 31ஆம் தேதி தொடங்கி இன்று பிப்ரவரி 2ஆம் தேதி மதியம் 2 மணி வரை 2026ஆம் ஆண்டு தைப்பூச ரத்த தான பிரச்சாரம் நடைபெற்றது.

அதில், இன்று பிற்பகல் மணி 12 வரை மருத்துவமனைகளுக்கான இரத்த விநியோகம் 1781 பைகளை எட்டியதாக தேசிய ரத்த வங்கி தமது இன்ஸ்டாகிராம் அகப்பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)