கூலாய், 07 பிப்ரவரி (பெர்னாமா) -- ஜோகூர் மாநிலத் தேர்தலை எதிர்கொள்வதில் தொகுதிப் பங்கீடு தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை மற்றும் கலந்துரையாடல்களை அம்மாநில நம்பிக்கை கூட்டணி தொடங்கியுள்ளது.
இதுவரை நம்பிக்கை கூட்டணியில் உள்ள கட்சிகளை மட்டுமே உட்படுத்தி பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஜோகூர் மாநில ஜனநாயக செயல் கட்சி, ஜ.செ.க தலைவர் தியோ நீ சிங் தெரிவித்துள்ளார்.
''இந்த ஆண்டு ஜோகூர் மாநிலத் தேர்தலை எதிர்கொள்வதை நாம் தவிர்க்க முடியாது என்று நினைக்கிறேன். எனவே, ஜோகூர் மாநில நம்பிக்கை கூட்டணி தொகுதிப் பங்கீடு குறித்து விவாதித்து வருகிறோம்'', என்றார் அவர்.
இன்று கூலாயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் தியோ நீ சிங் செய்தியாளர்களிடம் பேசினார்.
நம்பிக்கை கூட்டணிக்குள் இருக்கும் தொகுதிகள் குறித்த கலந்துரையாடல்கள் நிறைவுப் பெற்ற பின்னர், இதர கட்சிகளுடான வாய்ப்புகள் அல்லது ஒத்துழைப்புகள் குறித்து ஆராயப்படும் என்று தொடர்பு துணை அமைச்சர்: தியோ நீ சிங் தெரிவித்தார்.
கடந்த மாநிலத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி 12 சட்டமன்றங்களில் வெற்றி பெற்ற நிலையில், அதில் பத்து தொகுதிகளில் ஜ.செ.க வென்றிருந்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)