Ad Banner
 பொது

மலேசியா - இந்தியா: கலாச்சாரம் & புவிசார் அரசியல் முக்கியத்துவம் பெற்றவை

08/02/2026 05:13 PM

புத்ராஜெயா, 08 பிப்ரவரி (பெர்னாமா) -- இந்தியாவை ஒரு சிறந்த மற்றும் நட்பு நாடாக வர்ணித்த பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், மலேசியா இந்தியாவுக்கு இடையே வளர்ந்து வரும் நெருக்கமான கலாச்சார உறவுகள் மற்றும் புவிசார் அரசியலின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார்.

அனைத்து துறைகளிலும் இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான தமது விருப்பதையும் அவர் வெளிப்படுத்தினார்.

''எங்கள் குழுவால் விரிவாக விளக்கப்பட வேண்டிய சில கவலைக்குரிய பிரச்சினைகளை நாங்கள் தனிப்பட்ட முறையில் கலந்துரையாடினோம். ஆனால், கொள்கை அவசியம். இந்தியாவை மலேசியாவிற்கு சிறந்த, நட்பு நாடாக, கலாச்சாரம் மற்றும் தற்போது இருக்கும் புவிசார் அரசியல் ரீதியாகவும் நெருக்கமாகவும் கருதுகிறோம்,'' என்றார் அவர். 

மோடியின் இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணத்தைத் தொடர்ந்து அந்நாட்டுடன் நெருக்கமான ஒத்துழைப்பை மலேசியா எதிர்பார்ப்பதாகவும் இதனை முக்கியமானப் பயணமாகக் கருதுவதாகவும் அன்வார் குறிப்பிட்டார்.

இதனிடையே, தமக்கு அளிக்கப்பட்ட அன்பான வரவேற்புக்கும், இந்தியாவிற்கும் மலேசியாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் அன்வாரின் மிகப்பெரிய பங்களிப்பிற்கும் நன்றி தெரிவித்துக் கொண்ட மோடி, அனைத்து துறைகளிலும் அந்த ஒத்துழைப்பு தொடர்ந்து வளர்ச்சி காணும் என்று குறிப்பிட்டார்.

மலேசியாவுடனான ஒத்துழைப்பை புதிய நிலைக்கு மேம்படுத்தவும் அனைத்து துறைகளிலும் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும், வளப்பத்தை பகிர்ந்து கொள்ளவும் இந்தியா விரும்புவதே இப்பயணத்தின் முன்னுரிமை என்று அவர் கூறினார்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]