Ad Banner
Ad Banner
 பொது

கடந்த 24 மணிநேரத்தில் 40க்கும் மேற்பட்ட சமூக ஊடக கணக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளன

13/02/2026 06:47 PM

புத்ராஜெயா, பிப்ரவரி 13 (பெர்னாமா) --  கடந்த 24 மணி நேரத்தில் இனவெறி கூறுகளுடன் நம்பகத்தன்மையற்ற உள்ளடக்கத்தைப் பரப்பியதாக சந்தேகிக்கப்படும் 40க்கும் மேற்பட்ட முகநூல் கணக்குகள் மற்றும் சுமார் 10 டிக்டோக் கணக்குகளை மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், எம்சிஎம்சி கண்டறிந்துள்ளது.

இந்திய மற்றும் மலாய் நபர்களுக்கு இடையிலான ஒரு சம்பவத்தை உள்ளடக்கி அதே நோக்கத்துடன் காணொளி ஒன்றும் பகிரப்பட்டதாக தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

"கடந்த 24 மணி நேரத்தில், இந்தியக் குண்டர் கும்பல் ஒன்று, நில உரிமையாளரான மலாய்காரர் ஒருவரைக் காயப்படுத்தியதாக ஒரு செய்தி பரவலாகப் பகிரப்பட்டது கண்டறியப்பட்டது. மேலும் அந்த காணொளி வழி இனவெறி கூறுகளைச் செருக முயற்சிக்கப்பட்டது. ஊடக நண்பர்கள் கவனமாகக் கவனித்தால், இந்த பதிவுகள் அனைத்தும் ஒரே வாக்கியத்தைப் பயன்படுத்தி ஒரே காணொளிப் பயன்படுத்தியிருப்பது தெரியவரும்," என்றார் அவர்.

நாடாளுமன்ற நேரடி ஒளிபரப்பின் போது பொருத்தமற்ற தகவல்கள் அல்லது கருத்துகளைப் பதிவிட்டதாக நம்பப்படும் 19 போலியான சமூக ஊடக கணக்குகளையும் எம்சிஎம்சி அடையாளம் கண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அந்த 19 கணக்குகளில், இரு கணக்குகள் போலி கணக்குகள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள 17 கணக்குகள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக  ஃபஹ்மி தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)