Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

உயிரிழந்த 84 கடலோடிகளின் உடல்களை ஈரான் தூதரகத்திடம் ஒப்படைக்க உத்தரவு

12/03/2026 01:57 PM

இலங்கை, 12 மார்ச் (பெர்னாமா) --  இலங்கை கடற்கரையில் கடந்த வாரம் ஈரானியப் போர்க்கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்ட 84 கடலோடிகளின் உடல்களை ஈரான் தூதரகத்திடம் ஒப்படைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.

கல்லே நகரில் உள்ள துறைமுக போலீசாரின் கோரிக்கையைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவித்தன.

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போர் உலக சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி எண்ணெய் விலையை உயர்த்தி, வர்த்தகம் மற்றும் பயணத்தை சீர்குலைத்துள்ள நிலையில், இந்தியா ஏற்பாடு செய்த கடற்படைப் பயிற்சியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, IRIS Dena என்ற போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலை நடத்தியதில் அந்தக் கடலோடிகள் கொல்லப்பட்டனர்.

இத்தாக்குதலில் 32 பேர் உயிர் தப்பினர்.

சடலங்கள் தற்போது கல்லே தேசிய மருத்துவமனையில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, ஈரானின் இரண்டாவது கப்பலான, IRIS Booshehr கப்பலின் 208 பணியாளர்களுக்கு இலங்கை 30 நாள் நுழைவு விசாக்களை வழங்கியுள்ளது.

அதே வட்டாரத்தில் சம்பந்தப்பட்டக் கப்பலில் இயந்திர பிரச்சனை ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அந்நாட்டின் தற்காப்பு அமைச்சர் அருணா ஜெயசெகரா தெரிவித்தார்.

மேலும், 183 பணியாளர்களைக் கொண்ட மூன்றாவது ஈரானிய போர்க்கப்பலான IRIS Lavan, தென்னிந்தியாவின் கொச்சி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)