கோலாலம்பூர், 18 மார்ச் (பெர்னாமா) -- Tonsils என்பது அடிநாச் சுரப்பிகள் அல்லது தொண்டையின் பின்புறத்தில் அமைந்துள்ள மென்மையான திசுக்களாகும்.
உள்ளிழுக்கப்பட்ட அல்லது உட்கொள்ளப்பட்ட நோய்க்கிருமிகளைத் தடுத்து நோய் எதிர்ப்பு மண்டலத்தின் முதல் நிலை பாதுகாப்பாக, இந்த அடிநாச் சுரப்பிகள் செயல்படுகின்றன.
எனினும், அதன் சக்திக்கு மீறிய நோய்க்கிருமிகளை எதிர்கொள்ளும் போது தொற்று ஏற்பட்டு Tonsillitis எனப்படும் அடிநாச் சுரப்பி அழற்சியும் உருவாகிறது.
பொதுவாகவே ஐந்திலிருந்து 15 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கும் குறைவான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களுக்கும் அடிநாச் சுரப்பி அழற்சி அதிகம் ஏற்படுவதாக தொழில் மற்றும் பாதுகாப்பு சுகாதார நிபுணர் டாக்டர் புவனேஸ்வரி சவாசுரி தெரிவித்தார்.
சளி தொற்றுகள், கிருமி தொற்றுகள், சுத்தமின்மை, பகிர்ந்து பயன்படுத்தும் பொருள்கள் உட்பட அடிக்கடி குளிர்பானம் அருந்துவதும் இந்த அழற்சிக்கான முதன்மை காரணங்கள் என்று குறிப்பிட்ட டாக்டர் புவனேஸ்வரி, அதற்கான அறிகுறிகளையும் விவரித்தார்.
''அதிகமான காய்ச்சல் ஏற்படும். தொண்டை, தலை, காது மற்றும் உடல் வலி உண்டாகும். உடல் அதிகச் சோர்வாக இருக்கும். சிலருக்கு அதிகமான இருமல், சளி ஏற்படும். சாப்பிட முடியாது. இன்னும் சிலருக்கு மலச்சிக்கல் கூட ஏற்படலாம். வாய் துர்நாற்றம் வீசும். தொண்டை பகுதி அதிகம் சிவந்து காணப்படும்,'' என்றார் அவர்.
இந்த அழற்சி ஏற்படும் பட்சத்தில் அதற்கான சிகிச்சை முறை குறித்தும் அவர் இவ்வாறு பகிர்ந்து கொண்டார்.
''இரண்டிலிருந்து மூன்று லிட்டர் தண்ணீர் அருந்துவது மிக அவசியம். போதுமான ஓய்வெடுங்கள். காய்ச்சல், சளி, இருமல் ஏற்பட்டால் அதற்கேற்றவாறு மருந்தை உட்கொள்ளுங்கள். எனினும், Antibiotics எனப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பியை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள வேண்டாம். அறிகுறிகள் மோசமாகும் பட்சத்தில் உடனடியாக மருத்துவரை நாடுங்கள்,'' என்றார் அவர்.
எனவே, கைகளை அடிக்கடி கழுவுதல், தனிப்பட்ட பொருள்களை பகிர்ந்து கொள்ளாமல் இருத்தல், குளிர்பானங்களை தவிர்த்தல், மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு வகைகளை அதிகம் உட்கொள்ளுதல் போன்றவை இதிலிருந்து நம்மை பாதுகாக்கும் என்றும் அவர் கூறினார்.
நம் உடலில் ஏற்படும் பெரும்பாலான உடல் உபாதைகளுக்கு அடிநாச் சுரப்பி அழற்சி காரணமாக அமைவதால், அது ஏற்படாமல் பாதுகாப்பது மிக அவசியமான ஒன்று என்று டாக்டர் புவனேஸ்வரி வலியுறுத்தினார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]