Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

மோதல் தீவிரமடைந்தால் உலகளவில் பசி பட்டினி மோசமடையும்- ஐ.நா எச்சரிக்கை

18/03/2026 04:34 PM

நியூ யார்க், 18 மார்ச் (பெர்னாமா) -- ஈரான் தொடர்புடைய மோதல் தீவிரமடைவது உலகளவில் பசி பட்டினியை மேலும் மோசமடையச் செய்யும் என்று ஐக்கிய நாடுகள், ஐ.நா சபை எச்சரித்துள்ளது.

உலக உணவுத் திட்டத்தின் மதிப்பீடுகளை மேற்கோள் காட்டி பேசிய ஐ.நா. துணை பேச்சாளர் ஃபர்ஹான் ஹக், மத்திய கிழக்கு மோதல் இந்த ஆண்டின் மத்தியப் பகுதிக்குள் முடிவுக்கு வராமலும், கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 100 டாலருக்கு மேல் நீடித்தாலும், 2026-ஆம் ஆண்டில் மேலும் கிட்டத்தட்ட நான்கு கோடியே 50 லட்சம் மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்ளக்கூடும் என்று தெரிவித்தார்.

அந்த எண்ணிக்கைத் தவிர்த்து, உலகளவில் ஏற்கனவே 31 கோடியே 80 லட்சம் பேர் உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொண்டுள்ளதையும் ஃபர்ஹான் ஹக் சுட்டிக்காட்டினார்.

''இறுதியில், சண்டை முடிவுக்கு வந்தால் ஹோர்முஸ் நீரிணை செயல்பாட்டுக்கு வரும் என்பதே அடிப்படை விஷயம். தற்போது, முக்கியமானது என்னவென்றால், ஹோர்முஸ் நீரிணை செயல்படுவதை உறுதிசெய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். ஏனெனில், நான் சற்று முன்பு சுட்டிக்காட்டியது போல, அது திறக்கப்படாமல் இருப்பதன் விளைவுகளில் ஒன்று, உலகப் பசி கடுமையாக அதிகரிப்பதாகும்,'' என்றார் அவர்.

மோதலுக்கு இராணுவம் தீர்வு இல்லை என்ற ஐ.நா.வின் நிலைப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தியதோடு, சண்டையை முடிவுக்குக் கொண்டுவரவும் அழைப்பு விடுத்தார்.

இதனிடையே, காபூலில் உள்ள போதைபித்தர்களுக்கான மறுவாழ்வு மருத்துவ மையம் மீது பாகிஸ்தான் இராணுவப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானுக்கான ஐ.நா. உதவிப் பணி, UNAMA போர் நிறுத்தத்திற்கான தனது அழைப்பை மீண்டும் வலியுறுத்தியதாக, அவர் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)