Ad Banner
Ad Banner
Ad Banner
 விளையாட்டு

சீ விளையாட்டுப் போட்டி; சரவாக் தொடங்கி அதற்கான சுற்றுப்பயணத் தொடர்

18/03/2026 05:36 PM

புத்ராஜெயா, 18 மார்ச் (பெர்னாமா) -- நோன்பு பெருநாள் கொண்டாட்டத்திற்குப் பின்னர், 2027 சீ விளையாட்டுப் போட்டிக்காக சரவாக் தொடங்கி அதற்கான சுற்றுப்பயணத் தொடரை இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு, கே.பி.எஸ் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த விளையாட்டுப் போட்டி குறித்து மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தும் ஓர் ஆரம்ப கட்ட நடவடிக்கையாக இம்முயற்சி அமையும் என்று கே.பி.எஸ் அமைச்சர் டாக்டர் முஹமட் தௌஃபிக் ஜொஹாரி தெரிவித்தார்.

இந்த சுற்றுப்பயணத் தொடர், விளையாட்டின் அமைப்புமுறை குறித்து சமூகத்தினருக்கு முன்கூட்டியே அறிமுகப்படுத்தும் நோக்கம் கொண்டதாகும் என்று அவர் கூறினார்.

அந்த சுற்றுப்பயணத்தின் தொடக்க இடமாக சரவாக் தேர்வு செய்யப்பட்டிருப்பது, அம்மாநிலத்தின் பெருமைக்கு ஏற்புடையதாகக் கருதப்படுகிறது.

''ஆகவே, நோன்பு பெருநாளுக்கு பிறகு, ஏப்ரல் மாதம் நான் முதலில் சரவாக்கில் தொடங்குவேன், பின்னர் நாங்கள் மற்ற மாநிலங்களுக்குச் செல்வோம், அதன்பிறகு சின்னங்கள் மற்றும் பலவற்றுடன் இது இன்னும் உற்சாகமானதாக இருக்கும்,'' என்றார் டாக்டர் முஹமட் தௌஃபிக்.

இதனிடையே, நான்கு வெவ்வேறு மாநிலங்களில் நடைபெற்று வரும் ஏற்பாடுகள் குறித்துப் பேசிய அவர், ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறு விளையாட்டு போட்டிகளை ஏற்பாடு செய்வதாக பெர்னாமாவிடம் தெரிவித்தார்.

2027 தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டியை மலேசியா ஏழாவது முறையாக நடத்தும் நிலையில், செப்டம்பர் 18 முதல் 29 வரை சரவாக், கோலாலம்பூர், பினாங்கு மற்றும் ஜோகூர் ஆகிய நான்கு முக்கிய மாநிலங்களில் அவை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)