புத்ராஜெயா, மே 06 (பெர்னாமா) -- HEART ATTACK எனப்படும் மாரடைப்பு மற்றும் CARDIAC ARREST எனப்படும் இருதய செயலிழப்பு தொடர்பான மரணச் சம்பவங்கள் நாட்டில் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
இருதயம் தொடர்புடைய இவ்விரு நோய்களும் அதிக ஆபத்துகள் உள்ளவை.
இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள் மற்றும் சுகாதார ரீதியாக மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டிய செயல்முறைகள் குறித்து விளக்கமளிக்கிறார் இருதயநோய் நிபுணர் டாக்டர் சரவணன் வெங்கடேச பிள்ளை.
''இரண்டுமே ஆபத்து நிறைந்ததுதான். மாரடைப்பு ஏற்பட்டு இருதய செயலிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மாரடைப்பு ஏற்பட்டு இருதய செயலிழப்பு வராமல் இருப்பதற்கும் சாத்தியம் உள்ளது. அதே வேளையில், மாரடைப்பு ஏற்படாமல் இருதய செயலிழப்பு மட்டும் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது. எனினும், பரிசோதித்தப் பின்னர்தான், அதற்கான காரணங்களை சொல்ல முடியும்,'' என்றார் அவர்.
மாரடைப்பும் இருதய செயலிழப்பும் ஒன்றை ஒன்று சார்ந்திருப்பதாகவும், இருதய செயலிழப்புக்கு ஒரு காரணங்களில் ஒன்றாக மாரடைப்பு உள்ளதாகவும் டாக்டர் சரவணன் கூறுகிறார்.
சிலருக்கு மரபணு காரணமாக, அதாவது பரம்பரை நோயாகவும் இது வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, நீரிழிவு நோய், இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் உடையவர்கள் அவற்றை கட்டுப்பாட்டிற்குள் வைத்து, முறையாக மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.
அவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில் மாரடைப்பு ஏற்படுத்துவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக டாக்டர் சரவணன் கூறினார்.
இருதயத்தில் ஏற்படும் வலி, பாரமாக இருத்தல், திடீரென்று அதிகமான வியர்வை வடிதல், மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
அதுமட்டுமின்றி, சிலருக்கு “Gastric” எனப்படும் இரைப்பைப் பிரச்சினை போன்று வயிற்று வலி தொடர்ச்சியாக ஏற்பட்டால் அதனை அலட்சியப்படுத்தக் கூடாது என்றும் டாக்டர் சரவணன் அறிவுறுத்தினார்.
''ஒருவேளை, மாதத்தில் இரண்டு முறை இந்த வழி வந்தது என்றால், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று அதற்கான காரணங்களைக் கண்டறியலாம்.,'' என்றார் அவர்.
இதனிடையே, பரபரப்பான வாழ்க்கைச் சூழலாக இருந்தாலும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.
சுகாதார பரிசோதனைகளை மேற்கொள்வது, மருத்துவரிடம் ஆலோசனைப் பெறுவது மட்டுமின்றி உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சியும் இதில் அடங்கும் என்று டாக்டர் சரவணன் கூறினார்.
அண்மையில், பெர்னாமா செய்திகளுக்கு வழங்கிய நேர்க்காணலில் அவர் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)