ஈப்போ, மே 08 (பெர்னாமா) -- இன்று தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை ஈப்போவில் உள்ள பேராக் பூப்பந்து அரங்கில் 22-ஆவது ஓகினாவா கோஜு ரியு (OKINAWA GOJU RYU) கராத்தே போட்டி விமரிசையாக தொடங்கியுள்ளது.
மலேசியா, இந்தியா, வங்காளதேசம், இந்தோனேசியா, சிங்கப்பூர், நேபாளம், இலங்கை, உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், கஸகஸ்தான், பிரான்ஸ் ஆகிய பத்து நாடுகளைச் சேர்ந்த 1,400 போட்டியாளர்கள் இதில் களமிறங்கியுள்ளனர்.
பேராக் மாநில கராத்தே கழகமும், மலேசியா ஓகினாவா கராத்தே கழகமும் இணைந்து மாநில அரசாங்கத்தின் ஆதரவோடு இப்போட்டியை ஏற்று நடத்துவதாக
போட்டியின் தொழில்நுட்ப துணைத்தலைவர் மாஸ்டர் ஸ்டாலின் சவரிமுத்து தெரிவித்தார்.
"இப்போட்டியில் சிறந்த திறனாற்றலை வெளிப்படுத்தும் போட்டியாளர்களை அடுத்த நிலைக்கு தயார்ப்படுத்துவதே எங்கள் நோக்கமாகும். மேலும் இம்முறை ஆறு வயது சிறுவர்களுக்கான போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், சிறு வயதிலிருந்தே பிள்ளைகள் தற்காப்புக் கலையில் மிளிர முடியும் என்றும் நம்புகிறோம்," என்றார் அவர்.
மேலும், போட்டியின் ஏற்பாட்டுக்குழுத் தலைவராக கண் மருத்துவ நிபுணர் டத்தோ டாக்டர் ஜஸ்விண்டர் சிங் பொறுப்பேற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இம்முறை நடைபெற்ற போட்டியில் மலேசியாவைப் பிரதிநிதித்து ஆயிரம் போட்டியாளர்களும் இந்தியாவிலிருந்து 350 போட்டியாளர்களும் பங்கேற்றுள்ளதாக மாஸ்டர் ஸ்டாலின் கூறினார்.
இன்று காலை நடைபெற்ற தொடக்க விழாவில் தேசிய கராத்தே சங்கத்தைச் சேர்ந்த டத்தோ வீரா நூர் அஸ்மி கலந்து கொண்டு போட்டியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)