Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

எபோலா நோய் பரவல் அதிகமாக இருக்கலாம் - ஐ.நா.

19/05/2026 08:16 PM

நியூயார்க் , 19 மே (பெர்னாமா) --  எபோலா நோய் பரவலை, உலக முக்கியத்துவம் வாய்ந்த பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்திருக்கும் உலக சுகாதார நிறுவனம், WHO-வின் முடிவை, ஐக்கிய நாடுகள் சபை, ஐ.நா. மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

தற்போது கண்டறியப்பட்ட எண்ணிக்கையை விட, இந்நோய் பரவல் அதிகமாக இருப்பதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக, ஐ.நா பேச்சாளார் ஃபர்ஹான் ஹக்தெரிவித்தார்.

''காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் உகாண்டாவில் ஏற்பட்டுள்ள எபோலா நோய்ப் பரவல், உலக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொது சுகாதார அவசரநிலையாகும் என உலக சுகாதார நிறுவனம் நேற்று அறிவித்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இது மேலும் பரவுவதற்கான அதிக அபாயத்தையும், தற்போது கண்டறியப்பட்டதை விட இந்த நோய்ப் பரவல் அதிகமாக இருப்பதற்கான சாத்தியக்கூற்றையும் சுட்டிக்காட்டுகிறது. இந்த நோய்ப் பரவல், எபோலா நச்சுயிரியின் புண்டிபுக்யோ திரிபை உள்ளடக்கியது. இதற்கு தற்போது உரிமம் பெற்ற தடுப்பூசிகளோ அல்லது குறிப்பிட்ட சிகிச்சை முறைகளோ இல்லை'', என்றார் அவர். 

எபோலா நோய் பரவலை தடுத்த, தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் விரைவு மீட்புக் குழுக்களைப் பணியமர்த்துவது உட்பட WHO-வின் முயற்சிகளுக்கு ஐ.நா ஆதரவளித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

காங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா நோய் பரவல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டின் எல்லைகளுக்கு அப்பால் இந்நோய் மேலும் பரவுவதற்கான அதிக அபாயம் இருப்பதாக ஐ.நா. எச்சரித்துள்ளது.

இந்நிலையில், காங்கோ ஜனநாயகக் குடியரசின் அண்டை நாடான உகாண்டாவில் இரண்டு எபோலா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)