சிறப்புச் செய்தி

ஆள் கடத்தல் கொடுமைக்கு எதிரான உலகத் தினம் இன்று ; விழிப்புணர்வை ஏற்படுத்தும்

30/07/2021 08:58 PM

கோலாலம்பூர், 30 ஜூலை (பெர்னாமா)  -- போதைப்பொருள் விநியோகத்திற்குப் பிறகு, உலகின் இரண்டாவது மிகப்பெரிய குற்றத்தொழிலாக கருதப்படுவது ஆள் கடத்தல் ஆகும்.

வயது, இனம் மற்றும் பாலின வேறுபாடின்றி, ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உலகளவில் கடத்தப்படுகிறார்கள்.

வணிகரீதியான பாலியல், வன்முறை, மோசடி அல்லது வற்புறுத்தல் போன்ற காரணங்களைப் பயன்படுத்தி தினமும் ஆள் கடத்தல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மனிதக் குலத்திற்கு எதிரான இக்கொடுமையை ஒழிப்பதற்கும் அது குறித்த விழிப்புணர்வை உலக மக்களிடம் விதைக்கவும், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 30-ஆம் தேதி ஆள் கடத்தலுக்கு எதிரான உலகத் தினமாக அனுசரிக்கப்படுவதை, ஐக்கிய நாடுகளின் சபை 2013-ஆம் ஆண்டு அறிவித்தது.

இந்த ஆண்டு ஆள் கடத்தலுக்கு எதிரான உலகத் தினத்தின் கருப்பொருள், மனித கடத்தலில் இருந்து தப்பியவர்களிடமிருந்து அனுபவத்தைக் கேட்டு அதிலிருந்து கற்றுக்கொள்வதன் முக்கியத்துவம் ஆகும்.

பாதிக்கப்பட்டவர்களின் அனுபவங்களிலிருந்து கற்றுக் கொள்ளும் அணுகுமுறைகள் ஆள் கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கான வழிகாட்டியாகவும் அமையும் என்று ஐ.நா. நம்பிக்கைக் கொண்டிருக்கிறது.

ஆள் கடத்தல் குறித்த போதிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லாததே, கடத்தல்காரர்களுக்கு சாதகமாக அமைகிறது.

பாலியல் அடிமைத்தனம், பிச்சை மற்றும் கட்டாயத் தொழிலாளர்கள், கட்டாயத் திருமணம், குழந்தைகள் அல்லது சிறுவர்கள் விற்பனை, உடல் உறுப்புகளின் விற்பனை போன்ற நோக்கங்களுக்காக கடத்தல்காரர்கள் பல உத்திகளைப் பயன்படுத்தி மனிதர்களைக் கடத்திச் செல்கின்றனர்.

ஆகவே, எளிதில் பாதிக்கக்கூடியவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, மனிதக் கடத்தலிலிருந்து மீண்டு வருபவர்களிடமிருந்து கற்றுக் கொள்வதற்கு, ஐ.நா. அக்கருப்பொருளை இவ்வாண்டு முன்வைத்திருக்கிறது.

மேலும், ஆள் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தை அரசாங்கமும் அரசு சாரா இயக்கங்களும் செய்வது மிக முக்கியமான சமூகக் கடப்பாடு ஆகும்.

--பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)