நாட்டில் நுழைய முயற்சித்த 38 மியன்மார் பிரஜைகள் கைது

25/05/2022 07:49 PM

அலோர் ஸ்டார், 25 மே (பெர்னாமா) -- புக்கிட் காயூ ஈத்தாம்-மிற்கு அருகில், மலேசியா-தாய்லாந்து எல்லைப் பகுதியில், மலேசியாவுக்குள் நுழைய முயற்சித்த 38 மியன்மார் பிரஜைகளின் நடவடிக்கையை, இரண்டாவது மலேசிய காலாட்படை பிரிவின் தலைமையகம் நேற்று செவ்வாய்க்கிழமை முறியடித்தது.

அந்த சட்டவிரோதக் குடியேறிகள் அனைவரும் நேற்று காலை, ஆறாவது மலேசிய 
காலாட் படையின் கண்காணிப்பிலுள்ள பகுதியான, ஒப் பெந்தேங் துறையின், ரப்பர் தோட்டப் பகுதியில் கைது செய்யப்பட்டதாக இரண்டாவது மலேசிய காலாட்படை பிரிவின் தலைமையகம் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டது.

எல்லைப் பகுதியில், சந்தேகிக்கும் வகையில் பொது மக்களின் நடமாட்டம் இருப்பது அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

15 லிருந்து 40 வயதிற்குட்பட்ட 13 ஆண்களும் 25 பெண்களும் அதிகாரப்பூர்வ பயணக் கடப்பிதழ் இல்லாத மியன்மார் பிரஜைகளாவர்.

அவர்கள் அனைவரும் மேல் நடவடிக்கைக்காக, புக்கிட் காயூ ஈத்தாம் போலீஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

10 ஆயிரம் ரிங்கிட்டிற்கும் மேற்பட்ட மொத்த பறிமுதல் மதிப்பீட்டிலான, 23 கைத்தொலைப்பேசிகளும் தாய்லாந்து  நாணயத்திலான ரொக்க பணமும் பறிமுதல் செய்யப்பட்டன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)