பொது

ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் 13-வது பட்டமளிப்பு விழா இன்று தொடங்கியது

28/05/2022 08:30 PM

கெடா, 28 மே (பெர்னாமா) -- 2020/2021-ஆம் ஆண்டுகளுக்கான மருத்துவம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆசியான் கல்விக் கழகமான ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் 13-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.

சுமார் 664 மாணவர்கள், மருத்துவம், பல் மருத்துவம், மருந்தியல், உயிரியல் தொழில்நுட்பம் போன்ற பல துறைளில் இன்றும் நாளையும் பட்டம் பெறுகின்றனர். 

கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடைபெறாத நிலையில் இவ்வாண்டு இந்நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.  

அதோடு, இம்முறை 664 மாணவர்கள் பட்டம் பெற்றாலும் பணிக் காரணமாக 460 மாணவர்கள் மட்டுமே இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கின்றனர். 

கெடா, பீடோங்கில் அமைந்துள்ள அப்பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற இன்றைய பட்டமளிப்பு விழாவை ம.இ.கா தலைவர் டான் ஶ்ரீ எஸ்.ஏ விக்னேஸ்வரன் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

அதேவேளையில், ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் முதலாவது இணை வேந்தராக இந்தியா மற்றும் தெற்காசியாவிற்கான பிரதமரின் சிறப்பு தூதருமான டான் ஶ்ரீ விக்னேஸ்வரன் நியமிக்கப்பட்டார். 

இதனிடையே, ஏய்ம்ஸ் பல்கலைக்கழகத்தில் அதிகமான இந்திய மாணவர்களை இணைப்பதற்கு தமது தரப்பு பல முயற்சிகளை, குறிப்பாக எம்.ஐ.ஈ.டு எனப்படும் மாஜூ கல்விக் கழக மேம்பாட்டு நிறுவன கடனுதவியை வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார். 

''அதிகமான இந்திய மாணவர்கள் பட்டதாரிகளாக வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பு. நாங்கள் வழங்கும் கல்விக் கடனுதவியும் இதற்கான ஒரு முயற்சி,'' என்றார் அவர். 

நாடு தற்போது எண்டமிக் எனப்படும் முடிவில்லாத் தொற்று கட்டத்திற்குள் நுழைந்திருந்தாலும் அனைத்து செயல்பாட்டு தர விதிமுறைகள், எஸ்.ஓ.பி-யை பின்பற்றியே இன்றைய பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)]