அரசியல்

ஒற்றுமை அரசாங்கத்தில் இணைய சபாவின் ஜிஆர்எஸ்சும் இணக்கம் - அன்வார்

25/11/2022 04:29 PM

கோலாலம்பூர், 25 நவம்பர் (பெர்னாமா) -- தமது தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தில் ஜிஆர்எஸ் எனப்படும் சபா மக்கள் கூட்டணி இணைய விருப்பதை டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று உறுதிப்படுத்தினார்.

இதன் மூலம், மக்களவையில், நம்பிக்கை கூட்டணியின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வலுப்படுத்தப்படும் என்று அன்வார் தெரிவித்தார்.

சபா முதலமைச்சரும் ஜிபிஎஸ் தலைவருமான டத்தோ ஶ்ரீ ஹஜிஜி நோர் தம்மிடம் அம்முடிவை தெரிவித்ததாக அன்வார் தெரிவித்தார்.

"அதாவது, நேற்று அறிவிக்கப்பட்ட எங்களின் முக்கியமான கூட்டணியில் ஜிபிஎஸ்சும் ஜிஆர்எஸ்சும் அடங்கும். நாட்டின் அரசியல் நிலைத்தன்மையை வலுப்படுத்தும் மூன்றில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையும் நாங்கள் அடைந்திருக்கின்றோம் என்பதை இது காட்டுகிறது. இதன் மூலம் நாடு மற்றும் மக்களின் நலனைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தலாம்'' என்று அன்வார் தெரிவித்தார்

இதனிடையே, ஒற்றுமை அரசாங்கத்தின் அமைச்சரவை கூடிய விரைவில் அமைக்கப்படும் என்றும் அன்வார் தெரிவித்தார்.

அமைச்சரவை அளவு குறைக்கப்படுவதோடு, அது குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் தற்போது பேச்சுகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அன்வார் குறிப்பிட்டார்.

''அமைச்சரவையின் அளவை (அமைச்சர்களின் எண்ணிக்கை) நிச்சயம் குறைப்பேன். அமைச்சர்களின் சம்பளத்தை குறைப்பதற்கான பரிந்துரையை ஏற்றுக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்வேன். ஆனால், இவை அனைத்தும் இன்னும் பேச்சுவார்த்தை அளவிலேயே இருக்கின்றன.'' என்று நம்பிக்கை கூட்டணி தலைவருமான அவார் கூறினார்.

முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தலைமையிலான அமைச்சரவையில் இருந்த 31 அமைச்சர்களைக் காட்டிலும் தமது தலைமைத்துவத்தின் கீழான அமைச்சரவையில் 25 அமைச்சர்கள் மட்டுமே இடம்பெறுவார்கள் என்று அன்வார் இதற்கு முன்னர் கூறியிருந்தார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)