பொது

போதைப் பொருள் உட்கொண்டு பேருந்தை செலுத்திய 14 ஓட்டுநர்கள் கைது

21/02/2024 08:37 PM

குவாந்தான், 21 பிப்ரவரி (பெர்னாமா) -- இவ்வாண்டு சீனப் புத்தாண்டு பெருநாள் காலத்தின் போது மேற்கொள்ளப்பட்ட 21 நாட்கள் கண்காணிப்பு சோதனை நடவடிக்கையில் தடை செய்யப்பட்ட போதைப் பொருளைப் பயன்படுத்திய குற்றத்திற்காக நாடு தழுவிய அளவிலுள்ள 14 பேருந்து ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டனர்.

தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அவர்கள் அனைவரும் ஷாபு, மெத்தஃபெத்தமின், ஹைட்ராகோனிபல் உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக சாலைப் போக்குவரத்துத் துறையின் மூத்த அமலாக்க இயக்குநர் டத்தோ லோக்மான் ஜமான் தெரிவித்தார்.

அவர்கள் செலுத்திய பேருந்து சம்பந்தப்பட்ட தளங்களுக்கு சென்று சேர்வதற்காக பேருந்து முனையத்தில் இருந்து புறப்பட்ட போது அமலாக்க அதிகாரிகளால் அவர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு நிறுவனமான ஏஏடிகேவுடன் இணைந்து ஜேபிஜே நடத்திய ஆய்வின் முடிவில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்விவகாரம் குறித்து பேருந்து நிறுவனங்களின் உரிமையாளர்கள் மிக விரைவில் அழைக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

மேலும் கைது செய்யப்பட்டவர்களின் வாகன ஓட்டுரிமமும் ரத்து செய்யப்படுவதாக இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் டத்தோ லோக்மான் தெரிவித்தார். 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ) 502