பொது

தப்பியோடிய எஞ்சிய 30 சட்டவிரோதக் குடியேறிகளின் தேடல் தொடர்கிறது

27/02/2024 09:02 PM

புத்ராஜெயா, 27 பிப்ரவரி (பெர்னாமா) -- பிப்ரவரி முதலாம் தேதி பிடோர் தற்காலிக குடிநுழைவு தடுப்பு முகாமிலிருந்து தப்பியோடிய எஞ்சிய 30 சட்டவிரோதக் குடியேறிகளை குடிநுழைவு துறை தொடர்ந்து தேடி வருகிறது.

அவர்கள் இன்னும் பேராக் மாநிலத்திலேயே இருப்பதாக  குடிநுழைவு துறையின் தலைமை இயக்குநர் டத்தோ ருஸ்லின் ஜுசோ தெரிவித்தார்.

"எஞ்சிய 30 பேரை கண்டுபிடிப்பதில் நாம் தீவிரம் காட்டி வருகிறோம். ரோஹிங்கியா மக்கள் வசிக்கும் பகுதிகளில் நாங்கள் தேடல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம்,

அந்நிய நாட்டவர்கள் தங்கியிருக்கும் இடங்களில் சோதனை மேற்கொள்ளும் போது, கை ரேகை சோதனையும் நடத்தப்படுகிறது," என்று அவர் கூறினார்.

செவ்வாய்க்கிழமை பெர்னாமாவுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் ருஸ்லின் ஜுசோ அந்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். 

பிப்ரவரி முதலாம் தேதி பிடோர் தற்காலிக குடிநுழைவு தடுப்பு முகாமிலிருந்து 131 சட்டவிரோதக் குடியேறிகள் தப்பியோடினர்.

அவர்களில் ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

தப்பியோடியவர்களில் 115 பேர் ரோஹிங்கியா அகதிகள் என்றும், 15 பேர் மியன்மார் என்றும் ருஸ்லின் ஜுசோ கூறினர்.

மேலும் ஒருவர் வங்காளதேசத்தை சேர்ந்தவர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)