உலகம்

இந்தியாவில் உள்ள உலகின் மிகப் பெரிய மின்தூக்கியின் கொள்ளளவு 235 பேர்

18/04/2024 08:05 PM

புதுடெல்லி, 18 ஏப்ரல் (பெர்னாமா) --  மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் சென்டர் கட்டிடத்தில், உலகின் மிகப் பெரிய மின்தூக்கி உள்ளது.

அதில் ஒரே நேரத்தில் 235 பேர் ஏற முடியும்.

இந்த 25.78 சதுர மீட்டர் பயணிகள் மின்தூக்கியில் நான்கு கண்ணாடி கதவுகள், அழகான காட்சிகளை காணும் வகையில் கண்ணாடி சுவர்கள் மற்றும் படிகம் பதிக்கப்பட்ட கூரையுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பின் அளவை ஒத்திருக்கும்.

வினாடிக்கு ஒரு மீட்டர் வேகத்தில் ஐந்து தளங்களுக்கு இடையே மட்டுமே பயணிக்கும் இந்த மின்தூக்கி, ஆடம்பர அறையில் இருப்பது போல் இரண்டு  சொகுசு நாற்காலிகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022-ஆம் ஆண்டும் முதல் அக்கட்டிடத்தில் அந்த மின்தூக்கியைப் பொருத்தும் பணிகள் தொடங்கப்பட்டதாக அதன் கட்டுமான நிறுவனமான கோன்-னின் நிர்வாக இயக்குநர், அமித் கோசேய்ன் தெரிவித்தார். 

மாநாடுகள், கண்காட்சிகள் அல்லது திருமணங்கள் நடைபெறும்போது, வருகையாளர்களுக்கு வசதியாக இந்த மின்தூக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த வசதியினால், அவர்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டியதில்லை.

இருப்பினும், பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட மின்தூக்கியின் விலை வெளியிடப்படவில்லை.

ஆனால், இது இந்தியாவின் மிகப் பெரிய தனியார் துறை நிறுவனமான ரிலையன்ஸ் தொழில்துறையால் நிர்வகிக்கப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)