பொது

இசை நிகழ்ச்சியை முன்னிட்டு ரசிகர்களைச் சந்தித்தார் இசையமையாளர் ஏ.ஆர். ரஹ்மான்

09/07/2024 07:58 PM

கோலாலம்பூர், 09 ஜூலை (பெர்னாமா) -- இம்மாதம் ஜூலை 27ஆம் தேதி கோலாலம்பூரில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

அதனை முன்னிட்டு, நேற்று திங்கட்கிழமை ரஹ்மான் மலேசிய ரசிகர்களைச் சந்தித்தார்.

இசை நிகழ்ச்சியுடன் சேர்த்து, இந்தச் சந்திப்பு ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

STAR PLANET நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை வாங்கியிருக்கும் ரசிகர்கள், இச்சந்திப்புக் கூட்டத்திற்கு விண்ணப்பம் செய்து ரஹ்மானை நேரில் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றனர்.

இந்நிகழ்ச்சியின் போது, தமது இசைப் பயணத்தின் அனுபவங்கள் குறித்து ரசிகர்கள் அனுப்பிய கேள்விகளுக்கு ஏ.ஆர். ரஹ்மான் பதிலளித்தார்.

அதோடு, வளரும் இசை கலைஞர்களையும் இளைஞர்களையும் ஊக்குவிக்கும் விதமாக சில தகவல்களையும் அவர் பகிர்ந்து கொண்டார்.

''யாரைச் சார்ந்தும் நாம் செயல்பட வேண்டும். ஒவ்வொரு மனிதருக்கு தனித்திறமை இருக்கும். அதனை வெளியே கொண்டு வர முயற்சிக்க வேண்டும்,'' என்றார் அவர்.

இதனிடையே, இந்த ரசிகர்கள் சந்திப்புக் கூட்டத்திற்கு ஜோகூர், பினாங்கு, பேராக் போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் ரசிகர்கள் வருகைப் புரிந்திருந்தனர்.

பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் கேட்ட ரஹ்மானின் பாடல்கள் இன்றளவும் தங்களை மகிழ்ச்சிப்படுத்தி வருவதாகக் கூறிய அவர்கள், நடைபெறவிருக்கும் இசை நிகழ்ச்சியில் தங்களின் எதிர்பார்ப்பு குறித்தும் வெளிப்படுத்தினர்.

''சிறு வயதில் இருந்தே ஏ.ஆர் ரஹ்மானின் பாடல்களைத் தான் அதிகம் கேட்டு வளர்ந்தேன். அவரது இசை நிகழ்ச்சியிலும் 90ஆம் ஆண்டு பாடல்கள் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கின்றேன்,'' என்றார் தனபால் கணேஷ் குணமணி.

90ஆம் ஆண்டுகளில் தமது இசைப் பயணத்தைத் தொடங்கிய ரஹ்மானின் இசை மீதான தமது ஆர்வத்தை அவரின் சிறுவர் ரசிகர் ஒருவரும் பகிர்ந்து கொண்டார்.

''அவர் பயன்படுத்தும் இசை கருவிகள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதை நுணுக்கமாக கேட்பேன். இசை நிகழ்ச்சியிலும் அவரது இசைப் படைப்பை பார்க்க தயாராக இருக்கிறேன்,'' என்றார் சாய்நேஷ் அசோக்குமார்

கோலாலம்பூர், மெனாரா பி.ஜி.ஆர்.எம்-இல் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சுமார் ஆயிரத்து 500 ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ) 502