உலகம்

காஷ்மீரில் இராணுவ வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நால்வர் பலி

09/07/2024 07:36 PM

கதுவா, 9 ஜூலை (பெர்னாமா) -- காஷ்மீரின் சர்ச்சைக்குரிய பகுதியில் இந்திய ஆட்சிக்கு எதிராகப் போராடும் சந்தேகத்திற்குரிய கிளர்ச்சிகாரர்கள், திங்கட்கிழமை அவ்வட்டாரத்தின் தெற்கு பகுதியில் இராணுவ வாகனம் மீது பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தியதில், நான்கு இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.

மேலும் ஆறு பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதலுக்கு எந்தவொரு கிளர்ச்சிக் குழுவும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை.

இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரின் Kathua மாவட்டத்தில் ராணுவத்தினர் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசாரும் இராணுவத்தினரும் அப்பகுதிக்கு விரைந்ததோடு, அப்பகுதியைச் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியவர்களைத் தேடும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, குல்காம் மாவட்டத்தில் இரண்டு இந்திய ராணுவ வீரர்களும் தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் அறுவரும், இரு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, நடந்த அண்மைய தாக்குதல் இதுவாகும்.

முன்னதாக, ராஜௌரி மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார்.

இந்தியாவில் இருந்து காஷ்மீர் சுதந்திரம் பெற வேண்டும் அல்லது பாகிஸ்தானுடன் இணைக்கப்பட வேண்டும் என்று கோரி கிளர்ச்சிக்காரர்கள் 1989ஆம் ஆண்டு முதல் நடத்தி வரும் தாக்குதல்களினால் மக்கள், கிளர்ச்சிக்காரர்கள், அரசாங்கப் படைகள் என்று பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)