சிறப்புச் செய்தி

2023-இல் மித்ரா மூலம் 135,000 இந்தியர்கள் பயன்

14/07/2024 05:55 PM

கோலாலம்பூர், 14 ஜூலை (பெர்னாமா) -- கடந்தாண்டு முழுவதும் இந்திய உருமாற்றுப் பிரிவான மித்ரா மேற்கொண்ட இந்திய சமூகப் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களின் மூலம் பி40 பிரிவைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சத்து 35-ஆயிரம் இந்தியர்கள் பயனடைந்துள்ளனர். 

அது தொடர்பிலான 216 திட்டங்களை மேற்கொள்ளும் வகையில் 10 கோடி ரிங்கிட் நிதியை அரசாங்கம் ஒதுக்கியிருப்பதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

இந்திய சமூகத்தின் மனித மூலதன மேம்பாட்டுத் திட்டத்திற்காக, 21,321 பங்கேற்பாளர்களை இலக்காகக் கொண்டு மூன்று கோடியே 52 லட்சத்து 78,580 ரிங்கிட் 46 சென் செலவில் மொத்தம் 43 நிகழ்ச்சிகள் செயல்படுத்தப்பட்டதாக பிரதமர் தெரிவித்தார். 

அதேவேளையில், இந்திய சமூகத்தின் தொழில் முனைவோர் மற்றும் தொழில் மேம்பாட்டுத் திட்டத்திற்காக 83,883 பங்கேற்பாளர்களை இலக்காகக் கொண்டு மூன்று கோடியே 50 லட்சத்து 34,811 ரிங்கிட் 90 சென் செலவில் மொத்தம் 113 நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக அன்வார் கூறினார்.

சமூக மேம்பாட்டுத் திட்டம் உட்பட இந்திய சமூகத்தின் நலன், ஆன்மீகம் மற்றும் நல்வாழ்வு திட்டங்களுக்காக 29,043  பங்கேற்பாளர்களை இலக்காகக் கொண்டு இரண்டு கோடியே 96 லட்சத்து 86,607 ரிங்கிட் 64 சென் செலவில் மொத்தம் 60 நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதையும் அவர் குறிப்பிட்டார்.  

கடந்த ஜூன் 24-ஆம் தேதி பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி.சிவகுமார் மக்களவையில் எழுப்பிய வாய்மொழி கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக வழங்கிய பதிலில், பிரதமர் அந்த தகவல்களை குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 15,300 பேர் பயன்பெறும் வகையில் இந்தியர்களின் நலன்கள் தொடர்பான நான்கு திட்டங்களை மித்ரா செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அன்வார் கூறினார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)