பொது

அரியணை அமரும் சடங்கில் நினைவுப் பொருட்களை அலங்கரிக்க செம்பருத்திப் பூ

14/07/2024 06:39 PM

கோலாலம்பூர், 14 ஜூலை (பெர்னாமா) -- 1960-ஆம் ஆண்டு ஜூலை 28-ஆம் தேதி, செம்பருத்திப் பூ, நாட்டின் தேசிய பூவாக அறிவிக்கப்பட்டது.

அப்பூவுக்கு மேலும் சிறப்பு கூட்டும் வகையில் தமது அரியணை அமரும் சடங்கில் வழங்கப்படும் நினைவுப் பொருட்களை அலங்கரிக்க சுல்தான் இப்ராஹிம் செம்பருத்திப் பூவை தேர்வு செய்துள்ளார்.

விருந்தினர்களுக்கு வழங்கப்படவிருக்கும் புத்தகம், தட்டு மற்றும் முடிசூட்டு பதக்கம் ஆகியவற்றை அலங்கரிக்க செம்பருத்திப் பூவை பயன்படுத்த வேண்டும் என்று மாமன்னர் கேட்டுக் கொண்டதாக இஸ்தானா நெகாராவின் இஸ்தானா நெகாராவின் டத்தொ படுக்கா மஹாராஜா லேலா டத்தோ அசுவான் எஃபென்டி சைராகித்னைனி தெரிவித்தார்.

"இந்த முடிசூட்டு விழாவின் சிறப்பு அம்சங்களில் ஒன்று, பல விவகாரங்கள் மாமன்னரால் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. காரணம் மாமன்னர் மிகவும் திறமையான நபர். அவருக்குத் தேவையானவற்றை அவரே தேர்ந்தெடுக்கிறார். மாமன்னரிடம் மாதிரிகள் அல்லது வடிவமைப்பிற்கான தேர்வுகளை நாங்கள் வழங்கியது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. செம்பருத்திப் பூவுக்கு அவர் முன்னுரிமை வழங்கினார்," என்றார் அவர். 

மேலும், ஜூலை 20-ஆம் தேதி நடைபெறவிருக்கும் அரியணை அமரும் சடங்கிற்கான அழைப்பிதழும், ஜாவி மொழியில் கையால் எழுதப்படும் என்று டத்தோ அசுவான் குறிப்பிட்டார்.

இந்த அழைப்பிதழ்கள், மலாய் ஆட்சியாளர்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள அரச குடும்பத்தினருக்கு நேரடியாக வழங்கப்படும்.

தமது அரியணை அமரும் சடங்கிற்கான அழைப்பிதழை புருணை சுல்தான், சுல்தான் ஹசானால் பொல்கியாவிடம் நேரடியாக வழங்க கடந்த ஜூன் 25-ஆம் தேதி சுல்தான் இப்ராஹிம் பண்டார் ஶ்ரீ பெக்ஜாவானுக்குச் சென்றிருந்தார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)