பொது

வேப் புகைக்கும் பழக்கத்திற்கு பத்து வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் அடிமையாகின்றனர்

14/07/2024 07:19 PM

கோலாலம்பூர், 14 ஜூலை (பெர்னாமா) -- 2023-ஆம் ஆண்டில் மட்டும் வேப் அல்லது மின்னியல் சிகரெட் பயன்பாட்டினால் 1,200-க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதை உலகளவில் உள்ள சுமார் 700 சுகாதார மையங்களின் அறிக்கைகளை மேற்கொள்காட்டி உலக சுகாதார நிறுவனம், WHO தெரிவித்துள்ளது.

அதில், ஒவ்வாமை, நச்சு மற்றும் கடுமையான நுரையீரல் பாதிப்பு ஆகியவை முதன்மையில் இருப்பதாகவும் அந்நிறுவனம் கூறியது.

இந்நிலையில், நிக்கோட்டின் கலவையுடன் விற்கப்படும் மின்னியல் சிகரெட்டை புகைக்கும் பழக்கத்திற்கு அதிகமான இளைஞர்களும் யுவதிகளும் அடிமையாகி வருவதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கூறுகிறது.

சுமார் 16,000 சுவைகளில் விற்கப்படும் வேப் புகையை உள் இழுப்பதினால், உடனடியாக அவர்களின் மூளையைப் பாதிக்கும் என்று அச்சங்கங்கத்தின்ஆய்வு மற்றும் கல்விப் பிரிவு அதிகாரி என்.வி. சுப்பாராவ் தெரிவித்தார்.

"அதிலும், அண்மையக் காலமாக ஆசியான் நாடுகளில் உள்ள பெண்கள் அதிகமாக இந்த வேப் பழக்கத்திற்கு அடிமையாகி வருவது தெரிய வந்துள்ளது. அதனால், அவர்கள் புற்றுநோய் உண்டாகும் சாத்தியமும் அதிகமாகிறது," என்றார் அவர்.

மூளையில் பாதிப்பு, பெருங்குடல் புற்றுநோயை தவிர்த்து, 'இவாலி' எனப்படும் நுரையீரல் தொடர்பில் கடுமையான நோய் ஏற்படும் என்பதையும் என்.வி. சுப்பாராவ் சுட்டிக்காட்டினார்.

"மலேசியாவிலும் சிலர் 'இவாலி' நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், உலகளவில் ஆயிரக்கணக்கானோர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 'இவாலி' நோய்க்கு சிகிச்சைப் பெற மலேசியாவில் ஒருவருக்கு சுமார் 150,000 ரிங்கிட் வரை மருத்துவ செலவு ஏற்படும் என்று சுகாதார அமைச்சு அண்மையில் தெரிவித்திருந்தது," என்று அவர் எச்சரித்தார்.

பத்து வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் அதிகமாக இந்த வேப் பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பது தமது தரப்பு மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்திருப்பதால், பெற்றோர் தங்கள் பிள்ளைகளைக் கண்காணிக்க வேண்டும் என்று சுப்பாராவ் வலியுறுத்தினார்.

இதனிடையே, மின்னியல் சிகரெட்டில் உள்ள நிக்கோடின் எனும் மிகவும் ஆபத்துள்ள இரசாயனமே இந்த சுகாதார பிரச்சனைகளுக்கு முதன்மை காரணமாக அமைவதால், அதன் பயன்பாட்டை மலேசியாவில் தடை செய்யும்படி பினாங்கு பயனீட்டாளர் சங்கம், அரசாங்கத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.

அதன் விற்பனை தொடர்பில், புதிய விதிமுறைகள் மற்றும் உத்தரவுகள் கூடியவிரைவில் அமல்படுத்தப்படும் என்ற சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மட்டின் அறிக்கையையும் அச்சங்கம் வரவேற்றுள்ளது.

தானியங்கி விற்பனை இயந்திரம் மூலம் மேற்கொள்ளப்படும் விற்பனை தொடர்பான விதிமுறைகளும் அதில் அடங்கும் என்று அமைச்சர் கூறியிருந்தாலும் ஆயிரக்கணக்கான கடைகளிலும் இணையத்திலும் இந்த வேப் விற்கப்படுவதால் அதற்கும் சட்டம் ஒன்றை உருவாக்கும்படி அரசாங்கத்தை அச்சங்கம் கேட்டுக்கொண்து.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)