பொது

ஏ.ஐ: போலியான படங்களை பரப்பும் யுக்திகள் குறித்து விழிப்புடன் இருப்பீர்

15/07/2024 05:03 PM

புத்ராஜெயா, 15 ஜூலை (பெர்னாமா) -- சமூக ஊடகத்தளங்களில், செயற்கை நுண்ணறிவு, ஏ.ஐ தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட காணொளிகள் மற்றும் 'deep fake' அல்லது போலியான படங்களை பரப்பும் யுக்திகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

அதே யுக்தியைப் பயன்படுத்தி, சில பொறுப்பற்ற தரப்புகள் லாபம் ஈட்டும் நோக்கத்தில் தமது குரலையும் முகத்தையும் உபயோகித்த வெளியிட்ட காணொளிகளை பாடகி டத்தோ ஶ்ரீ சிதி நூர்ஹலிசா அம்பலப்படுத்தியதை தொடர்பு அமைச்சர், ஃபஹ்மி ஃபட்சில் சுட்டிக்காட்டினார்.

வருத்தமளிக்கும் சூழ்நிலைகளை உடனடியாக கையாள்வதற்கான பொறுப்பை, சமூக ஊடகத்தள நடத்துனர்கள் ஏற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

''மேதா தரப்பு அதனைக் களையும் என்று நம்புகிறேன். ஏனெனில், வாட்ஸ்ஆப் மேதாவின் பொறுப்பின் கீழ் உள்ளது. அடுத்த வாரம் நான் சிங்கப்பூர் சென்று ஒவ்வொரு சமூக ஊடகத் தளங்களைச் சந்தித்து, ஏ.ஐ-இன் ஆபத்துகள் உட்பட அனைத்து விவகாரங்களையும் கலந்துரையாடுவேன்,'' என்றார் ஃபஹ்மி.

இன்று புத்ராஜெயாவில் தொடர்பு அமைச்சின் மாதாந்திரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், ஏ.ஐ தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடு நாட்டின் வளர்ச்சிக்கு ஊறுவிளைவிக்கும் என்றும் எச்சரித்தார்.

ஆகவே, ஏ.ஐ தொடர்பான மோசடி குற்றங்களைக் களைய அமைச்சுகள், நிறுவனங்கள் மற்றும் மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)