விளையாட்டு

யூரோ கிண்ணத்தை நான்காவது முறை வென்றது ஸ்பெயின்

15/07/2024 05:53 PM

பெர்லின், 15 ஜூலை (பெர்னாமா) -- 2024 யூரோ கிண்ணத்தை நான்காவது முறையாக வென்று ஸ்பெயின் சாதனைப் படைத்தது.

ஜெர்மனி, பெர்லினில் இன்று அதிகாலை நடந்த இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 2-1 என்ற கோல்களில் அது வீழ்த்தியது.

1964, 2008, 2012 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் வெற்றியாளர் பட்டத்தைக் கைப்பற்றியதன் மூலம் அதிக முறை யூரோ கிண்ணத்தை வென்ற நாடாக ஸ்பெயின் உருவெடுத்துள்ளது.

இறுதி ஆட்டம் வரை முன்னேறிய இரு நாடுகளும் தொடக்கம் முதலே கோல் போடுவதில் கவனமாக விளையாடியதால் முதல் பாதி கோல் ஏதுமின்றி முடிந்தது.

இரண்டாவது பாதி தொடங்கிய சில நிமிடத்தில் ஸ்பெயின் நிகோ வில்லியம்ஸ் மூலம் அதன் முதல் கோலை அடித்தது.

அதனைத் தொடர்ந்து, 73-வது நிமிடத்தில் இங்கிலாந்து ஒரு கோல் போட்டு 1-1 என்று ஆட்டத்தைச் சமன் செய்தது.

அடுத்த கோல் வெற்றியாளரை நிர்ணயிக்கும் என்பதால் இரு அணிகளும் விறுவிறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தின.

இறுதியில், 86-வது நிமிடத்தில் ஸ்பெயின் மைக்கேல் ஓயர்சபால் அந்த வெற்றிகோலை அடிக்க, கிண்ணத்தைக் கைப்பற்றும் வாய்ப்பை இங்கிலாந்து இழந்தது.

இம்முறை, யூரோவில் மொத்தமாக 15 கோல்களை அடித்திருக்கும் ஸ்பெயின், குழு பிரிவில், குரோஷியா, இத்தாலி, அல்பேனியா போன்ற நாடுகளை வீழ்த்தியதோடு காலிறுதி மற்றும் அறையிறுதி ஆட்டங்களில் ஜார்ஜியா, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய அணிகளைத் தோற்கடித்து வெற்றியாளராக உருவெடுத்துள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)