விளையாட்டு

கோபா: மீண்டும் வரலாறு படைத்தது அர்ஜெண்டினா

15/07/2024 06:03 PM

மியாமி, 15 ஜூலை (பெர்னாமா) -- 2024 கோபா அமெரிக்கா கிண்ணத்தை 16-வது முறையாக கைப்பற்றி மீண்டும் வரலாறு படைத்தது அர்ஜெண்டினா.

இன்று காலை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் கொலம்பியா அறுபது விழுக்காட்டைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த போதிலும் கோல் அடிக்க தவறியதால் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டது.

இறுதி நிமிடத்தில், லாட்டாரோ மார்டினெஸ் அடித்த ஒரே கோலினால் அர்ஜெண்டினா வெற்றியாளர் ஆனது.

முதல் மற்றும் இரண்டாம் பாதி ஆட்டங்களில் வழங்கப்பட்ட 90 நிமிடங்கள் கோல் ஏதுமின்றி முடிந்தன.

கோபா அமெரிக்கா இறுதிப் போட்டியில் மட்டும் தான் கூடுதல் நேரம் வழங்கப்படும்.

அதிலும், அர்ஜெண்டினா மற்றும் கொலம்பியா தரப்பில் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை.

அதனால் மீண்டும் 30 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டது.

அதில், இரண்டாம் பாதியின் இறுதி நிமிடங்களில் இரு நாடுகளும் முழு முயற்சியுடன் கோல் அடிக்கப் போராடின.

அதன் பலனாக, 112-வது நிமிடத்தில் அர்ஜெண்டினா ஒரு கோல் அடிக்க ஆட்டம் 1-0 என்ற நிலையில் அதற்கு சாதகமாய் முடிந்தது.

அந்த ஒரு கோலோடு சேர்த்து, இப்போட்டி முழுவதும் ஐந்து கோல்கள் அடித்ததால் லாட்டாரோ மார்டினெஸுக்குக் கோபா அமெரிக்கா தங்கக் காலணி விருது வழங்கப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)