பொது

வாடிக்கையாளர்களின் அலட்சியத்தால் உணவக உரிமையாளர்களைத் தண்டிக்காதீர்; PRESMA அறிவுறுத்தல்

15/07/2024 08:05 PM

கோலாலம்பூர், 15 ஜூலை (பெர்னாமா) -- கொவிட்19 பெருந்தொற்று காலகட்டத்தில் உணவகங்களில் புகைப்பிடிப்பதற்கான தடை கடுமையாக இருந்த நிலையில், தற்போது அதில் தளர்வு காணப்பட்டு அப்பழக்கம் மீண்டும் தலைத்தூக்கத் தொடங்கி உள்ளது.

இந்நிலையில், உணவகங்களில் புகைப்பிடிப்பதற்கான தடை உத்தரவு குறித்து சுகாதார அமைச்சுடன் இணைந்து அரசாங்கம் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றது.

அரசாங்கத்தின் பேச்சுவார்த்தை வரவேற்கப்பட்டாலும், வாடிக்கையாளர்களின் அலட்சிய போக்கினால் உணவக உரிமையாளர்களைத் தண்டிக்க வேண்டாம் என்று PRESMA எனப்படும் மலேசிய இந்திய முஸ்லிம் உணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் டத்தோ ஜவஹர் அலி கேட்டுக் கொண்டார்.

PRESMA-வின் கீழ் செயல்படும் பெரும்பான்மையான உணவகங்களில் சிகரெட்டுகள் உட்பட சாம்பல் தட்டுகள் விற்பனை செய்யபடுவதில்லை.

மாறாக, வளாகத்தின் பல இடங்கில் 'NO SMOKING' என்ற அறிவிப்பு அட்டை ஒட்டப்பட்டிருக்கும்.

இருப்பினும், வாடிக்கையாளர்கள் சட்டத்தைப் புறகணித்து, தம் விருப்பத்திற்குச் செயல்படுவது உணவக உரிமையாளர்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்துவதாக அவர் கூறினார்.

இதன் விளைவாக, உணவகங்களில் புகைப்பிடிக்கும் சம்பந்தப்பட்ட நபர் மட்டுமல்லாது உணவக உரிமையாளருக்கும் அபராதம் விதிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர் கூறினார்.

''அதையும் மீறி வாடிக்கையாளர்கள் புகைபிடிக்கும் போது, அவர்களைத் தடுத்து நிறுத்தாத குற்றத்திற்காக உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பது ஏற்புடையதல்ல'', என்றார் அவர்.

உணவகங்களில் புகைப்பிடிப்பதற்கான தடை உத்தரவு குறித்து பெர்னாமா தொடர்பு கொண்ட போது அவர் அவ்வாறு கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)