உலகம்

பயிற்சி மருத்துவர் கொலை; தொடரும் போராட்டங்கள்

17/08/2024 07:18 PM

புது டெல்லி, 17 ஆகஸ்ட் (பெர்னாமா) --  இந்தியாவில் உள்ள அரசாங்க மருத்துவமனை ஒன்றின் பயிற்சி மருத்துவர் ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆயிரக் கணக்கானோர் அந்நாட்டின் பல நகரங்களில் பேரணியில் ஈடுபட்டனர்.

உயிரிழந்த மாணவியின் மரணத்திற்கு நியாயம் கோரியும், மருத்துவ மாணவர் தங்கும் விடுதிகளிலும் மருத்துவமனைகளிலும் அதிக பாதுகாப்பைக் கோரியும் அப்பேரணி நடத்தப்பட்டது.

கல்கத்தாவில் உள்ள, மருத்துவமனையின் கருத்தரங்கு அறையில், மாநில அரசு நடத்தும் R.G. Kar மருத்துவக் கல்லூரியின் 31 வயதான பயிற்சி மருத்துவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த ஆர்ப்பாட்டம் ஆகஸ்ட் 9-ஆம் தேதி அமைதியாகவே தொடங்கியது.

எனினும், சில நாட்களில் மக்களிடையே கோபம் அதிகரித்து நாடு தழுவிய அளவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஆர்ப்பாட்டங்களாக உருவெடுத்தன.

“இந்த நாட்டில் பெண்களுக்கு தினமும் அநீதி இழைக்கப்படுகிறது. இத்தனை வருடங்கள் படித்து என்ன சாதிக்கிறோம் என்று புரியவில்லை. நீங்கள் பணக்காரராக, ஏழைப் பெண்ணாக, படித்த பெண்ணாக, படிக்காத பெண்ணாக என்று எப்படி இருந்தாலும் எல்லோருடைய தலைவிதியும் ஒன்றுதான். இந்த நாட்டில் நாங்கள் வாழ்வதற்கு எந்தக் காரணமும் இல்லை. வேட்டையாடுபவர்கள் இந்த நாட்டில் பெண்களுக்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம். நீதியும் இல்லை, எந்தவொரு நடவடிக்கையும் இல்லை,'' டாக்டர் ஹன்சிகா அனுராகி.

“அனைத்து சுகாதார நிபுணர்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். யார் வேண்டுமானாலும் எங்களைத் தாக்கலாம், நாங்கள் எதுவும் செய்ய முடியாது. இது நடக்கக்கூடாது,'' என்றார் டாக்டர் அன்ஷுல் திரிப்பதி,

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது.

2022-ஆம் ஆண்டில், போலீசார் 31,516 கற்பழிப்பு சம்பவங்களைப் பதிவு செய்துள்ளனர்.

இது, 2021-ஆம் ஆண்டைக் காட்டிலும் 20 விழுக்காடு அதிகமாகும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ) 502