உலகம்

பயிற்சி மருத்துவர் கொலை; பல பகுதிகளில் தொடரும் போராட்டங்கள்

18/08/2024 04:45 PM

புது டெல்லி,18 ஆகஸ்ட் (பெர்னாமா) -- அரசாங்க மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை எதிர்த்து சிறந்த பாதுகாப்பும் நியாயமும் கோரி சனிக்கிழமை பல நகரங்களின் மருத்துவமனை வளாகங்கங்ளில் ஆயிரக்கணக்கானோர் பேரணியில் ஈடுபட்டனர்.

புது டெல்லியின் நாடாளுமன்றம் அருகே கூடிய மக்கள், இக்கொலை மற்றும் கற்பழிப்பு தொடர்பில் பொறுப்புணர்வு வேண்டும் என்ற பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் களம் இறங்கினர்.

''ஆணாக இருந்தாலும் சரி. பெண்ணாக இருந்தாலும் சரி. ஒரு பெண் பலாத்காரம் செய்யப்படலாம் அல்லது ஒரு ஆணைக் கொலை செய்ய முடியாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அதைதான் நான் உணர்கிறேன். மேலும், இதற்கு மருத்துவர்கள் மட்டுமல்ல, அனைத்து சுகாதாரப் பணியாளர்களும் ஒன்றுபட வேண்டும்,'' என்று போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர் மிலி ரேய் தெரிவித்தார்.

''பல கோரிக்கைகள் உள்ளன. முதலாவதாக பெண்களின் பாதுகாப்பு. குறிப்பாக பணியிடங்களில். பணியில் இருக்கும் பெண்களுக்கு அவை ஏற்புடையதாக இல்லை. பணி அறைகள் இல்லை. பாதுகாப்பு ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது. பின்னர் உறவினர்களிடமிருந்து வன்முறை உள்ளது. இது தற்போது வழக்கமாகிவிட்டது. ஒவ்வொரு நாளும் மருத்துவர்கள் தாக்கப்படுவதை நீங்கள் அடிக்கடி பார்க்கிறீர்கள். இது மிகவும் வருத்தமளிக்கிறது,'' என்று மற்றொருவரான பெயர் குறிப்பிட விரும்பாத நபர் கூறினார் 

கொலை நடந்த மேற்கு வங்க மாநிலத்தின் கிழக்கு நகரமான கொல்கத்தா உட்பட மும்பை மற்றும் ஹைதராபாத் போன்ற இதர நகரங்களிலும் இதேபோன்ற போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

பொதுவாக அமைதி போராட்டங்களே நடத்தப்பட்டு வருகின்றன. 

கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி, அரசாங்கத்தின் கீழ் செயல்படும் R.G.Kar மருத்துவமனையில்  31 வயது பயிற்சி மருத்துவர் கொலை செய்யப்பட்டதை போலீஸ் கண்டுப்பிடித்ததைத் தொடர்ந்து இப்போராட்டங்கள் தொடங்கின.
-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)