பொது

ஆசிரியை கொலை வழக்கு; முன்னாள் ஆசிரியர் மீது குற்றச்சாட்டு

19/08/2024 05:39 PM

அலோர் காஜா, 19 ஆகஸ்ட் (பெர்னாமா) -- கடந்தாண்டு இறுதியில் ஆசிரியை ஒருவரை கொலை செய்த வழக்கில் முன்னாள் ஆசிரியர் ஒருவர் இன்று மலாக்கா, அலோர் காஜா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.

மாஜிஸ்திரேட் டாக்டர் தியோ ஷூ யீ முன்னிலையில் அக்குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது 36 வயதான முஹமட் ஃபட்ஸ்லி அரிஃபாட்சிலா அதனைப் புரிந்துகொண்டதாக தலையசைத்தார்.

இருப்பினும், இவ்வழக்கு உயர்நீதிமன்ற அதிகாரத்தின் கீழ் இருப்பதால் குற்றம் சாட்டப்பட்டவரிடமிருந்து எவ்வித வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் 26-ஆம் தேதியிலிருந்து 31-ஆம் தேதிக்குள், மலாக்கா, புலாவ் செபாங், கம்போங் தஞ்சோங் ரிமாவ் லுவார் சாலை அருகே, 33 வயதான இஸ்திகோமா அஹ்மாட் ரோசியைக் கொலை செய்ததாக முஹமட் ஃபட்ஸ்லி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 302-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுவதால், குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை மற்றும் பிரம்படி விதிக்கப்படலாம்.

கொலை குற்றம் சம்பந்தப்பட்ட வழக்கு என்பதால் தனிநபர் உத்தரவாதத்தின் பேரில் விடுவிக்க துணை அரசு வழக்கறிஞர் முஹமட் நஸ்ரின் அலி ரஹிம் அனுமதிக்கவில்லை.

மாறாக, மரபணு பரிசோதனை மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்காக நீதிமன்றம் இவ்வழக்கை அக்டோபர் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது

இதனிடையே, இன்று, மலாக்கா மருத்துவமனையின் தடயவியல் பிரிவில் இஸ்திகோமா அஹ்மாட் ரோசியின் உடலை அவரின் குடும்ப உறுப்பினர்கள், பிற்பகல் மணி 2.10 அளவில் பெற்றுக்கொண்டனர்.

எனினும், அவர்கள் ஊடகவியலாளர்களைச் சந்திக்க மறுத்துவிட்டனர்.

கிளந்தான், பாசிர் மாசில் உள்ள இஸ்லாமிய மையத்துக் கொல்லையில் இஸ்திகோமாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]