பொது

வீட்டை மோதிய கொள்கலன் லாரி; உயிர் தப்பிய பெண்

19/08/2024 07:51 PM

புக்கிட் காயூ ஹித்தாம், 19 ஆகஸ்ட் (பெர்னாமா) --  இன்று, கெடா, புக்கிட் காயூ ஹித்தாம் வீடமைப்பு பகுதியில் கொள்கலன் லாரி ஒன்று வீட்டின் முன்புற பகுதியில் மோதியதில் அவ்வீடு முற்றாக சேதமடைந்துள்ளது.

மதியம் சுமார் 2.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் வீட்டின் முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு வாகனங்கள் உட்பட ஒரு மோட்டார் சைக்கிள் சேதமடைந்துள்ளது.

இச்சம்பவத்தின் போது தாம் வீட்டில் தனியாக இருந்ததாகவும் கடவுளின் ஆசியால் உயிர் பிழைத்ததாகவும், 37 வயதுடைய ஷஃபிகா ஷாஃபி கூறினார்.

''என்னுடைய பாதுகாப்பு குறித்து நான் தினமும் கடவுளிடம் பிரார்த்தனை செய்வேன். இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் கடவுளின் ஆசியால் இன்று நான் உயிர் பிழைத்தேன்'', என்று அவர் கூறினார்.

மேலும், கொள்கலன் லாரியிலிருந்து வந்த வேக தடையின் சத்தம் கேட்டவுடன், வீட்டின் இடிபாடுகளில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க தாம் விரைந்து செயல்பட்டதாக ஷஃபிகா தெரிவித்தார்.

இதனிடையே, விபத்து குறித்த புகாரைத் தம் தரப்பு பெற்றதுடன், அதற்கான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, கெடா, குபாங் பாசு மாவட்ட போலீஸ் தலைவர் ரோட்ஸி அபு ஹாசன் உறுதிப்படுத்தினார்.  

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)