பொது

3R விவகாரம்: முகிடின் விளக்கப் பதிவு ஒத்திவைப்பு

20/08/2024 03:29 PM

கோலாலம்பூர், 20 ஆகஸ்ட் (பெர்னாமா) -- 3R எனப்படும் இனம், மதம் மற்றும் அரசக் குடும்பம் தொடர்பிலான விவகாரங்களைத் தொட்டுப் பேசியதற்காக பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான் ஶ்ரீ முகிடின் யாசினிடம் இருந்து நாளை விளக்கம் பெறப்படும்.

முகிடினின் வழக்கறிஞர் இன்னும் வெளிநாட்டில் இருப்பதால் இன்று பெறப்படவிருந்த விளக்கப் பதிவு நாளை ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக தேசிய போலீஸ் தலைவர் டான் ஶ்ரீ ரசாருடின் ஹுசேன் தெரிவித்தார்.

மலேசிய முதலீட்டு மேம்பாட்டு வாரியமான, எம்.ஐ.டி.ஏ-வில் உள்ள அவரின் அலுவலகத்தில் நாளை காலை மணி 11-க்கு முகிடினிடமிருந்து விளக்கம் பெறப்படும் என்பதை பெர்னாமா தொடர்பு கொண்டபோது டான் ஶ்ரீ ரசாருடின் உறுதிபடுத்தினார்.

முன்னதாக, இன்று காலை மணி 11-க்கு எம்.ஐ.டி.ஏ-வில் சுமார் 15 ஊடகவியலாளர்கள் அவ்விவகாரம் குறித்த செய்தி சேகரிப்பிற்காக கூடினர்.

அண்மையில் நடைபெற்ற கிளந்தான், நெங்கிரி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது 3R தொடர்பிலான விவகாரங்கள் குறித்து வேண்டுமென்றே உரை நிகழ்த்தியதாக முன்னாள் பிரதமருமான டான் ஶ்ரீ முகிடின் மீது புகாரளிக்கப்பட்டுள்ளது.

பகாங் சுல்தான், அல்-சுல்தான் அப்துல்லா ரி'அயாத்துடின் அல்-முஸ்தாஃபா பில்லா ஷா 16-வது மாமன்னராக பொறுப்பேற்றிருந்த காலக்கட்டத்தில் அவரின் கடமையையும் பொறுப்பையும் அலட்சியப்படுத்தும் விதமாக முகிடினின் கூற்று அமைந்திருந்தது.

இந்நிலையில், போலீசார் சமரசம் ஏதும் காணாமல் பாகோ நாடாளுமன்ற உறுப்பினருமான முகிடின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பகாங் மாநில பட்டத்து இளவரசர், தெங்கு ஹசானால் இப்ராஹிம் ஆலம் ஷா வலியுறுத்தினார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]