உலகம்

பாகிஸ்தான்: பருவமழைக் காலம் தொடங்கியதிலிருந்து 200-க்கும் அதிகமானோர் பலி

20/08/2024 05:12 PM

இஸ்லாமாபாத், 20 ஆகஸ்ட் (பெர்னாமா) -- பாகிஸ்தானில் ஜூலை முதல் பருவமழைக் காலம் தொடங்கியதிலிருந்து அந்நாட்டில் பதிவான கனமழை மற்றும் வெள்ளத்தால் 200-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

70 ஆண்டுகளுக்கு பிறகு கனமழையினால் பல்வேறு பகுதிகளில் மோசமான வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் தெற்கு நகரங்களான சுக்கூர் மற்றும் லர்கானாவில் உள்ள மக்களை மீட்பு பணியாளர்கள் படகுகள் மூலம் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இரண்டு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட தென் கராய்ச்சியில் அடுத்த 24 மணி நேரம் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள நீர்மட்டத்தை குறைக்க அதிகாரிகள் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருவதாக கூட்டரசு தகவல் அமைச்சர் ஷர்ஜீல் மெமன் தெரிவித்தார்.

இதனிடையே, 215 உயிரிழப்புச் சம்பவங்களில் பாதி குழந்தைகள் என்றும் 400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டின் தேசிய பேரிடர் நிர்வகிப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது,

மத்திய நகரமான பஞ்சாபிலும், வடமேற்கு மாகாணம் கைபர்-பக்துன்க்வாவிலும் அதிகமான இறப்புகள் பதிவாகியுள்ளன.

பாகிஸ்தான் முழுவதும் ஆகஸ்ட் 25-ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]