உலகம்

பாகிஸ்தானில் போலீஸ் வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பேர் பலி

23/08/2024 04:13 PM

பாகிஸ்தான்,, 23 ஆகஸ்ட் (பெர்னாமா) -- பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், நேற்று ஒரு போலீஸ் வாகனம் மீது ராக்கெட் மூலம் இயக்கப்படும் கையெறி குண்டுகளுடன் ஆயுதம் ஏந்திய சிலர் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 12 அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

மேலும், குறைந்தது எழுவர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர்களில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தென் பஞ்சாப் போலீஸ் இன்ஸ்பெக்டர், கம்ரான் கான் தெரிவித்தார்.

ரஹிம் யர் கான் மாவட்டத்தில் நடந்த இச்சம்பவத்திற்கு உடனடியாக எந்தவொரு தரப்பும் பொறுப்பேற்கவில்லை.

அப்பகுதியில் செயல்படும் கொள்ளையர்களைத் தேடி ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இந்த அதிகாரிகள் தாக்கப்பட்டுள்ளனர்.

இத்தாக்குதலை நடத்தியவர்கள் கொள்ளையர்களாக இருக்கலாம் என்றும் தீவிரவாதிகள் அல்ல என்றும் பஞ்சாப் போலீசார் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாக இதுபோன்ற வன்முறைகளும் தீவிரவாத தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றன.

ஆனால் ஒரே தாக்குதலில் இத்தகைய அதிக எண்ணிக்கையிலான போலீசார் உயிரிழப்பது அரிதாகும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)