பொது

எஸ்.எஸ்.பி.ஏ: தேர்வு செய்ய 40 நாள்கள் கால அவகாசம்

13/09/2024 06:23 PM

கோலாலம்பூர், 13 செப்டம்பர் (பெர்னாமா) --  இவ்வாண்டு டிசம்பர் முதலாம் தேதி தொடங்கவிருக்கும் பொது சேவை ஊதிய முறை, எஸ்.எஸ்.பி.ஏ-வை தேர்வு செய்வது அல்லது எஸ்.எஸ்.எம் எனப்படும் மலேசிய ஊதிய திட்டத்தில் நிலைத்திருப்பது எனும் விரும்பத் தேர்வைச் செய்வதற்குப் பொது சேவை ஊழியர்களுக்குக் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

வரும் அக்டோபர் 21 தொடங்கி நவம்பர் 30-ஆம் தேதி வரையில் 40 நாள்களுக்குள் அவர்கள் அம்முடிவைச் செய்ய வேண்டும் என்று பொது சேவை தலைமை இயக்குநர் டான் ஶ்ரீ வான் அஹ்மாட் டஹ்லான் அப்துல் அசிஸ் தெளிவுப்படுத்தினார்.

நிரந்தர அந்தஸ்து கொண்ட பொது சேவை ஊழியர்களின் ஓய்வூதியத்திற்கு, எஸ்.எஸ்.பி.ஏ அமலாக்கம் பாதிப்பை ஏற்படுத்தாது.

அதோடு, எஸ்.எஸ்.பி.ஏ-வை தேர்ந்தெடுக்கும் அரசாங்க ஊழியர்களுக்கு மட்டுமே புதிய ஊதிய சீரமைப்பு முறை பயன்படுத்தப்படும் என்று வான் அஹ்மாட் டஹ்லான் சுட்டிக் காட்டினார்.

எஸ்.எஸ்.பி.ஏ அமலாக்கத்தின் மூலம் பொது சேவை சீர்திருத்தத்தின் எதிர்பார்ப்புகள் தொடர்ந்து வலுப்பெறும் என்று அரசாங்கம் நம்புவதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவர் குறிப்பிட்டார்.

இன்று தொடங்கி www.sspa.jpa.gov.my எனும் அகப்பக்கத்தில் மத்திய பொது சேவை ஊழியர்களுக்கான பொது சேவை ஊதிய முறை அமலாக்கத்தின், 2024-ஆம் ஆண்டு முதலாவது சேவை சுற்றறிக்கையைக் காணலாம் என்ற தகவலையும் வான் அஹ்மாட் டஹ்லான் பகிர்ந்து கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)