பொது

கோபியோ திட்டங்களுக்கு அமைச்சு ஆதரவளிக்கும்

15/09/2024 05:33 PM

கோலாலம்பூர், 15 செப்டம்பர் (பெர்னாமா) --  நாட்டில் இந்திய சமூகத்தினரின் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் கொண்டாடும் வேளையில், ஒருமைப்பாட்டை வளர்ப்பதில் தொழில்நுட்பத்தின் பங்களிப்பை எடுத்துக் காட்டும் இந்திய வம்சாவளி மக்கள் PIO என்ற அனைத்துலக விழாவை இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ இன்று தொடக்கி வைத்தார்.

கலாச்சார உறவுகளை வலுப்படுத்துவதில் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை கோடி காட்டிய அவர், மலேசியாவில் உள்ள இந்திய வம்சாவளி மக்களின் அனைத்துலக அமைப்பு, கோபியோ திட்டங்களுக்கு தனது அமைச்சு ஆதரவளிக்கும் என்று உறுதியளித்தார்.

"கோபியோ எனது அமைச்சின் உதவியை கோரியது. நிச்சயமாக நாங்கள் அவர்களுக்கு ஆதரவளிப்போம். சுற்றுலா மற்றும் பண்பாட்டு அமைச்சு கூட அவர்களின் நிகழ்ச்சிக்கு ஆதரவளிக்கிறது. அதை செய்வதில் எனக்கு மகிழ்ச்சி,'' என்றார் அவர்.

இன்று, பிரிக்பீல்ட்சில் உள்ள விவேகானந்தா இடைநிலைப்பள்ளியில் PIO அனைத்துலக விழாவின்போது அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

மலேசியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து 25,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களைக் கவரும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த விழாவை ஏற்பாடு செய்ததற்காக கோபியோ மலேசியாவிற்கு கோபிந்த் சிங் பாராட்டு தெரிவித்தார்.

இந்தியர்களின் வளமான கலாச்சாரம், வரலாறு, கலைகள் மற்றும் பாரம்பரியங்களை வெளிப்படுத்தும் வகையில் நடத்தப்படும் PIO வருடாந்திர நிகழ்ச்சி, கலாச்சாரம், வரலாறு மற்றும் பாரம்பரிய கண்காட்சிகள் ஆகியவை உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளுடன் மூன்று நாட்களுக்கு நடைபெறவிருக்கிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)