பொது

GISBH: விசாரணைக்காக மேலும் 29 பேருக்கு தடுப்புக் காவல்

22/09/2024 07:13 PM

ஷா ஆலம், 22 செப்டம்பர் (பெர்னாமா) --  விசாரணைக்கு உதவும் பொருட்டு, GISBH நிறுவனத்துடன் தொடர்புடைய 29 பேர் இன்று தொடங்கி, ஒன்றிலிருந்து ஏழு நாள்கள் வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

துணைப் பதிவாளர் முஹமட் சுர்பி ஹசிம் முன்னிலையில், 19-இல் இருந்து 62 வயதிற்குட்பட்ட அவர்கள் அனைவருக்குமான தடுப்புக் காவல் விண்ணப்பிக்கப்பட்டது.

இன்று காலை மணி 11.30-க்கு ஷா ஆலம், சுல்தான் சாலாஹுடின் அப்துல் அசிச் ஷா நீதிமன்றத்திற்கு அந்த 13 ஆடவர்களும் 16 பெண்களும் அழைத்து வரப்பட்டனர்.

ஷா ஆலம், சுபாங் ஜெயா மற்றும் பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையகங்களில் உள்ள தடுப்பு அறையில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

2001-ஆம் ஆண்டு சிறார்கள் சட்டம், செக்‌ஷன் 31(a), 1984-ஆம் ஆண்டு அச்சிடும் இயந்திரம் மற்றும் வெளியிட்டு சட்டம் உட்பட 2007-ஆம் ஆண்டு ஆள்கடத்தல் தடுப்பு மற்றும் புலம்பெயர்ந்தோரின் கடத்தல் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.

நேற்று, ரவாங், பண்டார் Country Homes-இல் GISBH-உடன் தொடர்புடையதாக நம்பப்படும் வணிகத் தளங்கள் பலவற்றை சிலாங்கூர் மாநில போலீசார் சோதனையிட்டனர்.

தீபகற்ப மலேசியா முழுவதும் 82 தளங்களில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கைகளின் மூலம், Op Global சோதனை நடவடிக்கை நான்காம் கட்டத்தை எட்டியுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ ரசாருடின் ஹுசேன் நேற்று தெரிவித்திருந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)